[X] Close

எனர்ஜி ரஜினி; பட்டையைக் கிளப்பும் ‘பேட்ட’  


petta-energy-rajini

பேட்ட ரஜினி

  • வி.ராம்ஜி
  • Posted: 11 Jan, 2019 19:15 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

பேட்ட படத்தில் பழைய எனர்ஜி ரஜினியைப் பார்க்கமுடிகிறது. படம் முழுக்க ரஜினி, ஸ்கீரின் முழுக்க ரஜினி, கதை முழுக்க ரஜினி, பார்ப்பவர்களின் மனசு முழுக்க ரஜினி… என ரஜினியையே மீட்டெடுத்துக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்.

சண்டைக்காட்சியில் இருந்து ப்ளாஷ்பேக் தொடங்குகிறது. ஊட்டியில் உள்ள காலேஜ் ஹாஸ்டல் வார்டன் வேலைக்கு சிபாரிசின் மூலம் வருகிறார் காளி (ரஜினி). ராகிங் கொடுமைகளைத் தடுத்து நிறுத்துகிறார். அப்படியே ஹாஸ்டல் உணவின் தரத்தையும் ருசியையும் சரிசெய்கிறார். இரவு நேரத்தில் வெளியே சென்ற அன்வர் எனும் மாணவர் மீது ஒரு கண் வைத்தபடியே இருக்கிறார். அவரிடம் கோபப்படுகிறார். பாசம் காட்டுகிறார்.

ஒருகட்டத்தில் தன்னுடைய காதலுக்கு உதவும்படி கேட்கிறார் அன்வர். அதற்காக, அந்தப் பையனின் காதலியுடைய அம்மாவை (சிம்ரன்) பார்க்கிறார். விவாகரத்து பெற்று மகளுடன் வாழும் சிம்ரன் மீது லேசாகக் காதல் பூக்கிறது ரஜினிக்கு. சிம்ரனுக்கும்தான்!

கல்லூரி மாணவன் பாபிசிம்ஹாவின் அட்டூழியங்களை ஒடுக்குகிறார். காதலர்தினத்துக்கு லவ்வர்ஸைப் பிடித்து தாலிகட்டச் செய்யும் போக்கைக் கண்டு வெளுத்தெடுக்கிறார். இப்படி இடைவேளை முழுக்க ரசனையும் ரகளையுமாக, ஜாலியும் கேலியுமாக பழைய ரஜினியை, எனர்ஜி ரஜினியைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

அன்வரை உதைக்க, பாபிசிம்ஹா ஆட்களுடன் வர, அங்கே இன்னொரு டிவிஸ்ட். பரபரப்பாகிறார் ரஜினி. யாரு யாரு யாரு… என்கிற விதமாக இடைவேளையும் அதற்குப் பிறகான மதுரை ப்ளாஷ்பேக்கும் என அங்கே இளம்வயது முறுக்குமீசை ரஜினி. த்ரிஷா மனைவி. இஸ்லாமிய நண்பர் சரண்ராஜ்… மன்னிக்கணும் சசிகுமார் என மதுரையில் அலப்பறையைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார் பேட்ட வேலன் என்கிற பேட்ட.

மதத்தைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு, காதலர் தினத்தை எதிர்ப்பது, ஜாதியை பிடித்துக் கொண்டு ஆணவக்கொலைக்காகவும் சொத்துக்காகவும் அப்பாவையே போட்டுத்தள்ளுவது, இந்து முஸ்லீம் காதல், இந்து முஸ்லீம் நட்பு என்று கதையினூடாக நிறைய நிறைய மெசேஜ்களை ரஜினிக்காகவே எடுத்து எடுத்துக் கோர்த்துக்கொடுத்திருக்கிறார் கார்த்திக்சுப்பராஜ்.

அந்த மாணவன் அன்வர் யார் என்பது பார்வையாளர்களுக்குப் பிறகு தெரிகிறது. அவரைக் காப்பாற்றத்தான் அங்கே ஹாஸ்டல் வார்டனாக வந்திருக்கிறார் ரஜினி என்பதும் புரிகிறது.

இடைவேளைக்குப் பிறகு உத்தரப்பிரதேசத்துக்குள் நுழைகிறது கதை. கூடவே ரஜினி ப்ளஸ் அவரின் வகையறாக்களும் அங்கே செல்ல, வில்லனின் கூட்டத்தில் விஜய் சேதுபதி முக்கியமான ஆள். மெயின் வில்லன் மிரட்டலான பாலிவுட் நடிகரான நவாஸுதீன் சித்திக். ஆனால் இதில் எப்போதும் மருந்து, சிகிச்சை என்றே இருக்கிறார்.

இவரை வீழ்த்துவதற்குத்தான் உத்தரபிரதேச பயணம். போர், ஆயுதம், விஜய்சேதுபதி, வாலி வதம் கதை என்றெல்லாம் சொல்லி, டபடபவென நவாஸுதீன் சித்திக்கைப் படைகள் சூழ, சுட்டுத்தள்ளிவிட்டு, ஸ்டைலாக வருகிறார்.

சின்னதும் பெரிதுமாக குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. சிம்ரன், த்ரிஷா என இரண்டு நாயகிகள். யாராவது ஒருத்தரை கூடுதலாகக் காட்டியிருக்கலாம். ஆனால் இல்லை. செக்கச்சிவந்த வானம் போல், அவரவர்க்கு உரிய ஸ்டைலில் அவரவரைக் காட்டியது போல், இதில் விஜய்சேதுபதி, சசிகுமார், நவாஸுதீன் சித்திக் ஆகியோருக்கும் ஓரளவு வாய்ப்புகள் கொடுத்திருக்கலாம். ஆனால் அதுவும் இல்லை. இப்படி இல்லைகள் இருந்தாலும் கூட, படம் முழுக்க ஓர் எனர்ஜி வியாபிக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக, நமக்கும் தொற்றிக் கொள்கிறது. அந்த எனர்ஜிதான் ரஜினி. படம் முழுக்க ரஜினியின் அட்டகாசம் ஆஸம் சொல்லவைக்கிறது என்பதுதான் படத்தின் ஹைலைட்.

அளவெடுத்தது போலான ரஜினிக்கான கதையை தயார் செய்திருக்கிற கார்த்திக் சுப்பராஜுக்கு வெயிட்டான பொக்கே பார்சல். அதைவிட முக்கியமாக, துள்ளல் ரஜினிக்காக, எனர்ஜி ரஜினிக்காக அளவெடுத்து காஸ்ட்யூம் டிசைன் பண்ணியிருப்பதும் அசத்தல். ராகிங்கைத் தட்டிக் கேட்பது, காதலுக்கு வக்காலத்து வாங்குவது, இட்லியைத் துக்கி அடித்து மயங்கி விழச் செய்வது, சமையலை லவ்வ்வ்வ்வ் பண்ணி செய்யணும் என்பது, ஆடுகளம் நரேன் ஆட்களையெல்லாம் அடித்துவிட்டு, அவர் வீட்டுக்கே வந்து ஒரு டீ கொடுங்கம்மா என்று சொல்வது. எல்லாம் பேசிமுடித்துவிட்டு கிளம்பும் போது, ‘என் கண்ணாடி கண்ணாடி’ என்று பதறுவது, டீ கேன்சல் என்று சொல்லிவிட்டு செல்வது, மார்க்கெட்டில் அடிவாங்கியவர்கள் வந்து சேர்ந்ததும், ‘வாங்க வாங்க, இப்பதான் வர்றீங்களா?’ என்று நக்கலடிப்பது, அந்த நாள் முதல், மலர்ந்தும் மலராத பாதிமலர், சிம்ரனிடம் உன்னை ஒன்று கேட்பேன், க்ளைமாக்ஸில் ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் பாடல் என்று படம் நெடுக பழைய பாடல்களை ரசிப்பதும் ஆடுவதும் அமர்க்கள அதகளம்.

ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை என எல்லாமே பக்கா பக்கபலம். ரஜினி பேச்சுக்குப் பேச்சு, பஞ்ச் பேசியிருப்பதும் கலாய்ப்பதும் என ரசித்து ரசித்து எழுதியிருக்கிறார் கார்த்திக் சுப்பராஜ். ஆனால் என்ன… எதை வைப்பது, எதை கட் செய்வது என்று யோசித்துவிட்டு ரெண்டையுமே படத்தில் வைத்துக்கொண்டுவிட்டார் போல. இரண்டாம் பாதி மிகப்பெரிய்ய்ய்ய்ய்ய்ய நீளம்.

இயக்குநர் மகேந்திரன், முனீஸ் ராமதாஸ், குரு சோமசுந்தரம் என ஏகப்பட்ட கேரக்டர்கள். சொல்லிக்கொள்ளும்படியாக விஜய்சேதுபதியும் சசிகுமாருமே இல்லை எனும் போது இவர்கள் எப்படி? அதுசரி கார்த்திக் சுப்பராஜ் சார். ஊட்டி கல்லூரியின் ஹாஸ்டல் வார்டன் வேலைக்கு பிரதமர் பி.ஏ. சிபாரிசு பண்ணுவதில் ஏதேனும் குறியீடு இருக்கிறதா என்ன? அதேசமயம், காதலர் தின எதிர்ப்பு, மாட்டிறைச்சி, உத்தரபிரதேசம் என்று வெளுத்தெடுத்திருக்கிற உங்களின் தைரியத்துக்கு சல்யூட் டைரக்டர் சார்.

ஆனாலும் பேட்ட அதகளப்படுத்துவதற்கும் படம் முழுக்க கைத்தட்டல்களும் விசில் சத்தமும் என பறப்பதற்கும் ஒரே காரணம், ரஜினி. பழைய ரஜினி. அந்த எனர்ஜி ரஜினி. இந்த ரஜினிதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் ஏக்கமும்! அந்த எதிர்பார்ப்பும் ஏக்கமும்தான் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜுக்கு.

எனர்ஜி ரஜினியை வைத்துக்கொண்டு பட்டையைக் கிளப்பியிருக்கிறது பேட்ட!

 

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close