[X] Close

வீரபாண்டிய சிவாஜி கட்டபொம்ம கணேசன்!  


kattabomman-birthday

வீரபாண்டிய சிவாஜி கட்டபொம்ம கணேசன்

  • வி.ராம்ஜி
  • Posted: 03 Jan, 2019 19:45 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

-வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் இன்று! 

வெள்ளையர்களை எதிர்த்துப் போராடிய முதல் குரல் எழுப்பிய மகா சூரன் வீரபாண்டிய கட்டபொம்மன், இத்தனை வீரத்துடனும் செறிவுடனும் திமிருடனும் கம்பீரத்துடனும், நடந்திருப்பானா? பேசியிருப்பானா? கர்ஜித்திருப்பானா… தெரியாது. ஆனால் பெயருக்கும் அவனுடைய போர்க்குரலுக்கும் உருவம் கொடுத்த அந்த நாயகனை உலகில் எவரும் அவ்வளவு எளிதாகக் கடந்து விடுவதோ மறந்துவிடுவதோ முடியாத காரியம். ஜீவனான நடிப்பில் ஜீவன் கொடுத்தவர் நடிகர்திலகம் சிவாஜிகணேசன்.

நாடகங்கள் மூலமாக மிகப்பெரிய வெற்றி பெற்ற நாடகத்தை, ‘எனக்கேத்த மாதிரியான கதையாப் பண்ணுங்களேன்’ என்று சக்தி கிருஷ்ணசாமியிடம் சிவாஜி சொல்ல, வேலை ஆரம்பமானது. ’இன்னொரு முக்கியமான விஷயம்… என் வாழ்க்கைலயே இந்தப் படம் ரொம்ப முக்கியமான படமா இருக்கணும்னு ஆசைப்படுறேன்’ என்று சிவாஜி சொல்ல, ஆமாம் என்று தயாரிப்பாளரும் இயக்குநருமான பி.ஆர்.பந்துலு ஆமோதித்து ஆர்வம் காட்டினார்.

இப்படித்தான் உருவானது வீரபாண்டிய கட்டபொம்மன். வெள்ளையர்களின் கண்களில் விரல் விட்டு ஆட்டிய அந்த மாவீரனின் கதாபாத்திரத்தை, சிவாஜியைத் தவிர வேறு எவருமே ஏற்றிருக்கமுடியாது. அப்படியே ஏற்றிருந்தாலும் கட்டபொம்மனுக்கு இந்த அளவுக்கான கெளரவம் கிடைத்திருக்குமா என்பதும் சந்தேகம்தான்.

சக்தி கிருஷ்ணசாமி கட்டபொம்மனின் சரிதத்தில் இருந்து ஒரு கதையை, சினிமா மொழிக்காக உண்டுபண்ணினார். வசனங்கள் முழுவதையும் எழுதிமுடித்தார். ம.பொ.சிவஞானம், இந்தக் கதைக்கான திரைக்கதை வடிவத்தை உருவாக்கிக் கொடுத்தார். அங்கே கட்டபொம்மனின் கதை, அட்டகாசமான சினிமா மொழிக்கான வடிவம் பெற்றது. அதற்கு பிரமாண்டமான உருவத்தைக் கொடுத்தார்கள் சிவாஜி – பந்துலு குழுவினர்.

1952ம் ஆண்டில் பராசக்தி மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்த சிவாஜிக்கு, 1959ம் ஆண்டு மே மாதம் 16ம் தேதி இன்னொரு பாய்ச்சல், இன்னொரு உயரம், அப்படியொரு சிகரம் என அமைந்ததுதான் வீரபாண்டிய கட்டபொம்மன். தமிழகம் முழுவதும் ரிலீசான அதே நாளில், லண்டனில் இந்தப் படத்தின் ஸ்பெஷல் ஷோ ஒளிபரப்பப்பட்டது. 1959 மே 16ம் தேதி ரிலீசானது வீரபாண்டிய கட்டபொம்மன். ஆமாம்… இப்போது 2019. இந்த வருடம்… சிவாஜியின் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு 60வது வருடம்.

எகிப்து பட விழாவில், இந்தப் படம் கலந்துகொண்டு திரையிடப்பட்டது. சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டது. சிறந்த படம், சிறந்த இசை எனும் விருதுகளையும் அள்ளியது. பந்துலுவின் இயக்கம் போல், சிவாஜியின் தெறிக்கும் நடிப்பு போல, ஜி.ராமநாதனின் இன்னிசையும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.  

அப்போதைய திருநெல்வேலி ஜில்லா. இப்போதைய தூத்துக்குடி மாவட்டத்தின் பாஞ்சாலங்குறிச்சியையும் கட்டபொம்மனைத் தூக்கிலிட்ட கயத்தாறையும் சினிமாக்கலையின் வழியாக, தமிழ் மண்ணிலும் தமிழ் மக்களின் மனங்களிலும் பதியச் செய்த பெருமையும் புண்ணியமும் இந்தப் படத்துக்குக் கிடைத்தது.

சிவாஜியின் மீசை கூட நடித்தது. சிலிர்த்தது. துடித்தது. எட்டப்பனிடம் பேசும் போதும் ஜாக்ஸன் துரையிடம் சீறும் போதும் சிங்கமென கர்ஜித்தார் சிவாஜி. நடை, பார்வை, சிரிப்பு, கம்பீரம் என கட்டபொம்மனுக்கு உயிர் கொடுத்தார். கட்டபொம்மனாகவே வாழ்ந்து காட்டினார்.

இன்றைக்கும் நெல்லைப் பக்கம் போகிறவர்கள், பாஞ்சாலங்குறிச்சியைப் பார்த்துவிட்டு வருகிறார்கள். சென்னை தி.நகரில் உள்ள போக் சாலை (இப்போது செவாலியே சிவாஜி கணேசன் சாலை)யில் உள்ள சிவாஜி வீட்டைக் கடக்கும் போதெல்லாம், இது குணசேகரன் வீடு, கட்டபொம்மன் வீடு, வ.உ.சி.யின் வீடு, பிரஸ்டீஸ் பத்மநாபன் வீடு, சாக்ரடீஸ், பாரிஸ்டர் ரஜினிகாந்த் வீடு… என்று இன்னும் பல பெயர்கள் சொல்லிக் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்.

இன்று (3.1.19) வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள். பன்னாட்டு நிறுவனங்களின் பொருட்களின் தாக்கத்தில் கட்டுண்டு கிடக்கிற நமக்கு, வீரபாண்டிய கட்டபொம்மனை நினைத்துப் பார்ப்போம். இன்றைய குழந்தைகளுக்கு வீரபாண்டிய சிவாஜி கட்டபொம்ம கணேசனின் வழியே, அவர்களுக்கு தேச உணர்வூட்டுவோம்.

தமிழ் சினிமா இருக்கும் வரை, தமிழுணர்வு உள்ள வரை, தேசிய உணர்வு இருக்கும் வரை சிவாஜியும் வீரபாண்டிய கட்டபொம்மனும் நம்முடனேயே இருப்பார்கள்! 

 

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close