[X] Close

மக்களவை தேர்தலில் சுயேச்சையாகப் போட்டி!- பிரகாஷ் ராஜ் அறிவிப்பு


i-will-be-contesting-in-the-coming-parliament-elections-as-an-independent-candidate

  • பாரதி ஆனந்த்
  • Posted: 01 Jan, 2019 11:07 am
  • அ+ அ-

வரும் 2019 மக்களவைத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடப் போவதாக நடிகர் பிரகாஷ் ராஜ் அறிவித்திருக்கிறார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்தார். நான் அரசியலுக்கு வருவது உறுதி... தனிக்கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் போட்டி... இது காலத்தின் கட்டாயம்... என்றெல்லாம் பேசினார். ஆனால், ஓராண்டு முடிந்த நிலையில் இன்னும் அவர் கட்சியை அறிவிக்கவில்லை. இந்நிலையில், 2018 டிசம்பர் 31-ல் பிரகாஷ் ராஜ் தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். புதியதொரு தொடக்கம்.. கூடுதல் பொறுப்பு.. உங்கள் அனைவரது ஆதரவுடன் வரும் மக்களவைத் தேர்தலில் நான் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடுவேன். எந்த தொகுதி என்பதை விரைவில் அறிவிக்கிறேன். உங்கள் முன்னால் இருப்பது மக்களாட்சி" எனப் பதிவிட்டிருக்கிறார்.

கவுரி படுகொலையும் களத்தில் சூடான பிரகாஷ் ராஜும்..

கர்நாடகாவின் முற்போக்கு சிந்தனை கொண்ட பத்திரிகையாளரான கவுரி லங்கேஷ் இந்து ஆதரவு அமைப்பினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த படுகொலைக்குப் பின்னரே பிரகாஷ் ராஜ் அரசியல் பார்வையையும் பதிவுகளையும் தெறிக்கவிட ஆரம்பித்தார் என்றால் அது மிகையல்ல. கவுரி லங்கேஷ் பிரகாஷ் ராஜின் சிறு வயது குடும்ப நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த சம்பவத்துக்குப் பின்னர் வலதுசாரி அரசியலைக் குறிவைத்து பல்வேறு விமர்சனங்களை அவர் முன்வைத்து வருகிறார். குறிப்பாக பாஜகவை அவர் தீவிரமாக விமர்சித்து வருகிறார்.

பிரதமர் மோடியையும் அவர் பகிரங்கமாக விமர்சிக்கத் தவறுவதில்லை.  #justasking என்ற ஹேஷ்டேக் கீழ் அவ்வப்போது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த கேள்விகளை அவர் எழுப்பிவருகிறார்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close