[X] Close

கார்த்திக் சுப்பராஜிடம் நடிகர்களை சிறப்பாகக் கையாளும் திறமை இருக்கிறது: நவாஸுதீன் சித்திக்


nawazuddin-siddhiqui-talks-about-karthik-subbaraj

  • காவேரி மாணிக்கம்
  • Posted: 29 Dec, 2018 14:50 pm
  • அ+ அ-

ரஜினிகாந்த் நடிப்பில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பேட்ட’. பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சசிகுமார், சிம்ரன், த்ரிஷா, மேகா ஆகாஷ், சனந்த் ரெட்டி எனப் பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற ஜனவரி 10-ம் தேதி ‘பேட்ட’ படம் ரிலீஸாக இருக்கிறது.

இந்நிலையில், தனியார் இணையதளம் ஒன்றுக்குப் பேட்டியளித்த நவாஸுதீன் சித்திக், கார்த்திக் சுப்பராஜ் பற்றிய தன்னுடைய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

“கார்த்திக் சுப்பராஜ் மற்றும் ரஜினி சார் இவர்களால்தான் நான் ‘பேட்ட’ படத்தை ஒப்புக்கொண்டேன். அனுராக் காஷ்யப்புக்கு கார்த்திக்கை நன்றாகத் தெரியும். நான் அனுராக்கிடம் கார்த்திக் பற்றிக் கேட்டபோது, ‘ஒப்புக்கொள்’ என்று சொன்னார். ‘கார்த்திக் புதியவர், ஆனால் மிகுந்த திறமைசாலி’ என்று அனுராக் சொன்னார். அதனால் நம்பிக்கையுடன் ‘பேட்ட’ படத்தில் நடிக்க முன்வந்தேன். 

‘பேட்ட’ படத்தில் எனது கதாபாத்திரம் குறித்து இப்போது அதிகம் பேச முடியாது. ஆனால், படத்தில் பெரும்பாலான கதாபாத்திரங்கள் இளம் பருவம், நடுத்தர வயது, வயதான பின்பு என ஒவ்வொரு காலகட்டத்திலும் தொடர்ந்து வருமாறு கதை அமைக்கப்பட்டுள்ளது. ஒரு கதாபாத்திரம் யார், என்ன, எப்படி வந்தது, என்ன தவறு செய்தது, என்ன செய்யப்போகும் என அனைத்தும் இருக்கும். நான் முறையாக நடிப்புக்கான கல்லூரியில் பயிற்சி பெற்ற நடிகன். ஒரு கதாபாத்திரம் குறித்து நிறைய தெரிந்து கொள்வேன்.

கார்த்திக் சுப்பராஜிடம் நடிகர்களை சிறப்பாகக் கையாளும் திறமை இருக்கிறது. எல்லா நடிகர்களிடமும் ஒரே மாதிரி இருக்க மாட்டார். என்னிடம் ஒரு பாணியில் வேலை வாங்குவார். விஜய் சேதுபதியிடம் வேறு மாதிரி வேலை வாங்குவார். யாரை எப்படி நடிக்க வைப்பது என்பது அவருக்குத் தெரியும். 

கார்த்திக் எனது கதாபாத்திரம் குறித்து நிறைய விவரங்களைச் சொன்னார். இயக்குநருக்கு ஒரு கதாபாத்திரம் குறித்து அதிகம் தெரிந்திருக்கும்போது, அதை நாம் நடிப்பது எளிதாகிவிடும். என்னைவிட அந்தக் கதாபாத்திரம் குறித்து இயக்குநர் அதிகம் புரிந்து வைத்திருப்பார். எனவே, நான் எப்போதும் இயக்குநரை நம்புவேன்” எனத் தெரிவித்துள்ளார் நவாஸுதீன் சித்திக்.

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close