‘சூர்யா 44’ மூலம் தமிழில் மீண்டும் பூஜா ஹெக்டே


சென்னை: ‘கங்குவா' படத்தை முடித்துவிட்ட நடிகர் சூர்யா, அடுத்து சுதா கொங்கரா இயக்கும் 'புறநானூறு' படத்தில் நடிக்கஇருந்தார். இந்தப் படத்துக்கு கூடுதல் நேரம் தேவைப்படுவதால் அதைத் தள்ளி வைப்பதாக சூர்யா அறிவித்தார்.

இதையடுத்து, கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். சூர்யாவின் 44-வது படமான இதை அவரின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு 40 நாட்கள் தொடர்ந்து அந்தமானில் நடக்கிறது.

இதில் சூர்யா ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. இப்போது படக்குழு அதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்தி, தெலுங்கில் கவனம் செலுத்தி வரும் பூஜா ஹெக்டே தமிழில், முகமூடி, பீஸ்ட் படங்களில் நடித்துள்ளார். இந்தப் படம் மூலம் தமிழுக்கு மீண்டும் வந்துள்ளார்.