[X] Close

மீண்டும் வருகிறது 'மென் இன் ப்ளாக்': இம்முறை உலகளவில் !


mib-international-trailer-released

  • kamadenu
  • Posted: 24 Dec, 2018 17:35 pm
  • அ+ அ-

வில் ஸ்மித், டாமி லீ ஜோன்ஸ் நடிப்பில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற 'மென் இன் ப்ளாக்' (எம்.ஐ.பி) திரைப்பட வரிசை மீண்டும் தொடரவுள்ளது.

வேற்று கிரக வாசிகளை கண்காணித்து, அதில் பூமிக்கு பாதகமான ஏலியன்களை ஒழிக்கும் வேலையை செய்து வரும் மென் இன் ப்ளாக் என்கிற அமைப்பைப் பற்றிய கதையே இந்தப் படங்கள். முதலில் மார்வல் மற்றும் மலிபு காமிக்ஸ் வெளியீடாக வந்த இந்தக் கதைகள் 1997-ல் முதன் முதலில் திரைப்படமானது. தொடர்ந்து 2002-ல் இரண்டாம் பாகமும், 2012ல் மூன்றாம் பாகமும் வெளியானது.

மொத்தமாக 1.65 பில்லியன் டாலர்கள் வரை வசூலித்திருக்கும் மென் இன் ப்ளாக் மீண்டும் திரைக்கு வருகிறது. இந்தப் படத்துக்கு 'மென் இன் ப்ளாக்: இண்டர்னேஷனல்' என பெயரிட்டுள்ளனர். 'தோர்' மூலம் சர்வதேச அளவில் ரசிகர்கள் பெற்றுள்ள கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்தும், அதே படத்தில் வால்கியர் என்ற கதாபாத்திரத்தில் நடித்த டெஸ்ஸா தாம்ப்ஸனும் இம்முறை எம்ஐபி ஏஜண்டுகளாக நடிக்கின்றனர். 'டேக்கன்' படப்புகழ் லயம் நீசனும் இந்த பாகத்தில் நடிக்கிறார். 

முதல் மூன்று பாக கதைகள் எம்.ஐ.பி அமைப்பின் அமெரிக்க கிளையில் நடப்பது போல இருக்கும். இந்த 4-வது பாகம் லண்டன் கிளையில் நடப்பது போல கதை அமைக்கப்பட்டுள்ளது. 'இடாலியன் ஜாப்', 'ஃபேட் ஆஃப் தி ஃப்யூரியஸ்' ஆகிய படங்களை இயக்கிய கேரி க்ரே இந்த பாகத்தை இயக்குகிறார். எம்.ஐ.பி அமைப்பில் இருக்கும் கருப்பு ஆட்டை கண்டுபிடித்து அழிப்பதே இந்த பாகத்தின் கதை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

ட்ரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. எம்.ஐ.பி படங்களுக்கே உண்டான ஆக்‌ஷன், ஏலியன்கள், காமெடி, அட்வென்ச்சர் என அனைத்து அம்சங்களும் இந்த பாகத்தில் இன்னும் கூட சிறப்பாக கையாளப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. 

2019 ஜூன் மாதம் 'எம்.ஐ.பி: இண்டர்னேஷனல்' வெளியாகவுள்ளது. 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close