[X] Close

சிலுக்குவார்பட்டியில் கிச்சுகிச்சு சிங்கம் - விமர்சனம்


silukkuvarpatti

சிலுக்குவார்பட்டி சிங்கம்

  • வி.ராம்ஜி
  • Posted: 23 Dec, 2018 19:41 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

பயந்தாங்கொள்ளி போலீசும் பயங்கர ரவுடியும் மோதிக்கொள்ள நேரிடுவதும் அந்த அவஸ்தையும் தவிப்பும் எப்படி இருக்கும் என்பதைச் சொல்வதுதான் சிலுக்குவார்பட்டி சிங்கம்.

இதை கதையாக அல்லது கதை போல் வைத்துக்கொண்டு வந்த படங்களின் பட்டியலில், சிலுக்குவார்பட்டி பத்தாயிரத்து சொச்சமான படம். என்ன… ‘கதையெல்லாம் மேட்டரே இல்லீங்க. வாங்க, வந்து சிரிச்சிட்டுப்போங்க’ என்பது போல் ‘சும்மா’ இஷ்டத்துக்குப் புகுந்து விளையாடியிருக்கிறார் இயக்குநர்.

சிபாரிசின் மூலம் போலீஸாகிறார் விஷ்ணு விஷால். கராத்தே தெரியாது. யாரைக் கண்டாலும் பயம். ஆனால் ஆப்பாயிலை எவராவது தெரியாமல் கூட தட்டிவிடக்கூடாது. கோபமாகிவிடுவாராம்.

சைக்கிள் சங்கர் என்பவன் மிகப்பெரிய ரவுடி. இவனைச் சுட்டுக்கொல்ல கமிஷனர் நரேன் திட்டமிட்டு அது நடக்காமல் போகிறது. தப்பித்து தலைமறைவாகிறார் சைக்கிள் சங்கர்.

இந்த நிலையில் அவருக்கு அமைச்சர் அசைன்மெண்ட் தருகிறார். அது… முன்னாள் அமைச்சரைக் கொல்லவேண்டும் என்பது. அதற்காக, நிலக்கோட்டை நோக்கிச் செல்லும் சைக்கிள் சங்கர், சிலுக்குவார்பட்டியில் கான்ஸ்டபிள் விஷ்ணுவிஷாலிடம் மாட்டிக்கொள்ள, அது யாரோவொரு சப்பையான ஆள் என்று அடித்து உதைத்து, லாக்கப்பில் தள்ளுகிறார்.

அதன் பிறகு சைக்கிள் சங்கரின் கூட்டாளிகள், அவரை அங்கிருந்து தப்பிக்கவைத்து அழைத்துச் செல்ல, எக்ஸ் மினிஸ்டரைக் கொல்லுவதை விட்டுவிட்டு, கான்ஸ்டபிள் விஷ்ணுவிஷாலை போட்டுத்தள்ள ‘சிரி’கொண்டு ஸாரி… வெறிகொண்டு திரிகிறார்.

சைக்கிள் சங்கரிடம் இருந்து விஷ்ணுவிஷால் தப்பித்தாரா, சைக்கிள் சங்கர் என்னானார் என்பதை கிச்சுக்கிச்சாகச் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் செல்லா அய்யாவு.

விஷ்ணுவிஷால், ரெஜினா, கருணாகரன், சைக்கிள் சங்கருடன், மன்சூரலிகானுடன், ஆனந்த்ராஜிடம் என்று எல்லா பக்கமும் இருந்து ரவுசு பண்ணுகிறார். ஒரு பக்கம் கருணாகரன், இன்னொருபக்கம் சிங்கமுத்து, அடுத்ததாக யோகிபாபு, நடுவிலே செல்பி எடுத்துக்கொண்டே இருக்கும் மனோகர், மன்சூர், ஆனந்த்ராஜ், லிவிங்ஸ்டன் என்று கல்யாண வீடு போல் நட்சத்திரப் பட்டாளம்.

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தின் கதாசிரியராக இருந்த செல்லா அய்யாவுக்கு, இந்தப் படத்தில் இயக்குநராக ப்ரமோஷன். எதற்கு ரிஸ்க் என்று அந்த ஸ்டைலிலேயே ஒரு படத்தைக் கொடுக்க முயன்றிருக்கிறார்.

ரெஜினா, டெம்ப்ளேட் நாயகி. ஒரு குத்தாட்டம் போடவிட்டு பிக்பாஸ் ஓவியாவை, சின்னபாஸ் ஆக்கிவிட்டார்கள். இடைவேளை வரை காமெடி கலாட்டாவுடன் நகரும் திரைக்கதை, இடைவேளைக்குப் பிறகு பள்ளிக்கூட மாறுவேடப் போட்டிக்கு வருவது போல் விஷ்ணுவிஷால் வருவதெல்லாம் சகிக்கமுடியவில்லை ரகம்.

முதலுக்கு மோசமில்லாத இடம்தான் காமெடி சினிமா. அதற்காக லாஜிக் பற்றியெல்லாம் கவலையே படாமல், கொஞ்சம் கூட யோசிக்காமல், சீன் பிடித்திருப்பதால், நகைச்சுவை வெறும் துணுக்குகளாக, துண்டுதுண்டாக வந்து விழுகின்றன.

கல்யாண வீடு, படத்தின் கேரக்டர்களெல்லாம் அந்த மண்டபத்தில் கூடுவது, அங்கே நடக்கிற களேபர கலாட்டாக்கள் என சுந்தர்.சி ஸ்டைலில், கடைசி கால்மணி நேரத்தில் காமெடி சடுகுடு விளையாடியிருக்கிறார் இயக்குநர்.

ஒளிப்பதிவு கண்ணுக்குக் குளிர்ச்சி. இசை காதுக்குத் தேன். லியோ ஜேம்ஸ் பாடல்களை ரசிக்க வைத்திருக்கிறார். யோகிபாபு எதற்கெடுத்தாலும் பதிலுக்கு பதில் என டைமிங்கில் ரகளை பண்ண, மைண்ட் வாய்ஸில் பேசுவதாக நேரடியாகப் பேசுவது போல் ஒட்டாமலேயே இருக்கின்றன கருணாகரனின் வசனங்கள். இந்த போலீசையாவது சிரிப்பு போலீசாகக் காட்டாமல் இருந்துவிடலாமா, அல்லது அப்படியே இருந்துவிட்டுப் போகட்டுமா என்று குழம்பித்தான் போயிருக்கிறார் டைரக்டர்.

நகைச்சுவை பொடிமாஸை, படம் நெடுக தூவுவதற்குப் பதிலாக, ஆப்பாயிலுக்குள் திரைக்கதையையும் ட்விஸ்ட்டையும் வைத்திருக்கிறார்.

ஆனால், கத்தி, கபடா, ரத்தம், வன்முறை என்றில்லாமல் கதை இருக்கோ இல்லியோ, போனோமா, உக்கார்ந்தோமா, சிரிச்சோமா, சந்தோஷமா எந்திரிச்சு வந்தோமா என்று நினைப்பவர்களுக்கு, சிலுக்குவார்பட்டி கிச்சுக்கிச்சு சிங்கம்தான்!

 

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close