[X] Close

டைரக்‌ஷன் டச்... அதுதான் கே.பி.ஸ்டைல்! - இன்று கே.பாலசந்தர் நினைவு தினம்


kb

கே.பாலசந்தர்

  • வி.ராம்ஜி
  • Posted: 23 Dec, 2018 12:18 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

சிகரத்தை அடைவது ஆனந்தமான ஒன்று. அதுதான் வெற்றிக்கான தலைமைப் பீடம். அப்படியொரு சிகரத்தை அடைந்து, அமைதியுடனும் ஆட்டம் போடாமலும் இருப்பதுதான் அந்தச் சிகரத்துக்கும் அழகு. மரியாதை. அப்படி அழகுடனும் மரியாதையுடனும் இன்றைக்கும் போற்றப்படுகிற சிகரம்... இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர்.
பாலசந்தர் என்ன மாதிரி படங்களை எடுப்பார் என்று எவரேனும் கேட்டால், என்ன மாதிரியான படங்களை எடுக்கவில்லை என்று எதிர்க்கேள்வி கேட்பார்கள் அவருடைய ரசிகர்களும் சினிமா ரசிகர்களும்! ஒரு வட்ட சதுரங்களுக்குள் அடங்கிவிடாமல், தன் கற்பனைகளை, தன் யதார்த்தங்களை எல்லை பரப்பியவர் பாலசந்தர். சொல்லப் போனால் எல்லைகளே அற்றவர்! 
தமிழ் சினிமாவில் இயக்குநர் ஸ்ரீதரின் வருகைக்குப் பிறகுதான், டைரக்டர் படம் என்று கொண்டாடத் தொடங்கினார்கள். டைட்டிலில் இயக்கம் ஸ்ரீதர் என்று போடும்போது, மிகப்பெரிய கரவொலி எழுந்தது. இது எம்ஜிஆர் படம், அது சிவாஜிபடம் என்று சொல்லுவது போல், ஸ்ரீதரின் படம் என்று ஆராதித்தார்கள். ஸ்ரீதருக்குப் பிறகு அப்படியொரு தனித்ததான இடத்தைப் பிடித்தவர் கே.பாலசந்தர்.
எல்லோரும் எம்ஜிஆரையும் சிவாஜியையும் தேடிச் சென்று, கதை சொல்லி, கால்ஷீட் கேட்டுக்கொண்டிருந்த சமயத்தில், பாலசந்தர், நாகேஷை நாயகனாக்கினார். முதல்படமே இயக்குநரின் படமாக அமைந்தது. அது நீர்க்குமிழி. மேஜர் சுந்தர்ராஜனையும் நாகேஷையும் கூட்டாக வைத்துக்கொண்டு, மேஜர் சந்திரகாந்த் எடுத்தார். பிறகு எதிர்நீச்சலடித்தார்.
பாலசந்தர் எதுமாதிரியும் படமெடுத்தார். க்ரைம் த்ரில்லரில் நாணல் எடுத்தார். பாலையா, நாகேஷ், முத்துராமன், மேஜர் என்று வைத்துக்கொண்டு பாமாவிஜயம் செய்தார். செளகாரின் நடிப்பை வெளிப்படுத்தும் காவியத்தலைவி, ஜெமினியின் புன்னகை, வெள்ளிவிழா, நான் அவனில்லை, ஜெய்சங்கரின் பூவாதலையா, நூற்றுக்கு நூறு என்று அப்படியும் பண்ணினார். இப்படியும் பண்ணினார். எப்படியும் பண்ணினார். ஆனால் எப்படிப் பண்ணினாலும் எல்லாவற்ற்லும் கே.பி.டச் இருந்தது. 


ஜெயந்தியின் நடிப்பைச் சொல்ல வெள்ளிவிழா, பாமா விஜயம், எதிர்நீச்சல், பிரமிளாவின் நடிப்புக்கு அரங்கேற்றம், சுஜாதாவின் நடிப்பை வெளிக்காட்டிய அவள் ஒரு தொடர்கதை, அவர்கள், ஜெயசித்ராவின் நடிப்புக்கு சொல்லத்தான் நினைக்கிறேன், ஸ்ரீவித்யாவின் மிகச்சிறந்த நடிப்புக்கு அபூர்வ ராகங்கள், ஸ்ரீதேவியின் நடிப்புக்கு மூன்று முடிச்சு, சரிதாவின் ஆகச்சிறந்த நடிப்பைக் கொண்டு வந்த மரோசரித்ரா, தண்ணீர் தண்ணீர், தப்புத்தாளங்கள், அக்னி சாட்சி, அச்சமில்லை அச்சமில்லை, சுஹாசினிக்கு சிந்துபைரவி, மனதில் உறுதி வேண்டும், ஷோபனாவுக்கு ருத்ரவீணா, கீதாவுக்கு புதுப்புது அர்த்தங்கள்... இப்படி எத்தனையோ படங்கள். ஏகப்பட்ட கதாபாத்திரங்கள். 
பாலசந்தர் படங்களில், நாகேஷ் தனித்துத் தெரிவார். மிளிர்வார். ஒளிர்வார். கமலும் அப்படித்தான். பாலசந்தரின் படங்களில் நாகேஷும் கமலும்தான் அதிகமாக நடித்திருப்பார்கள். ஒவ்வொரு கேரக்டரையும் வெகு இயல்பாகக் காட்டியிருப்பார். அதுதான் பாலசந்தரின் முத்திரை. அவருடைய ஸ்டைல். 
பாலசந்தர் படம் என்றாலே கேரக்டரும் புதிதாக இருக்கும். அந்தப் பெயர்களும் ஒரு டெம்ப்ளேட்டுக்குள் அடங்காமல் இருக்கும். பைரவி, லலிதா, கவிதா, சிந்து, சரசு, விகடகவி கோபால், ஜேகேபி, பிரசன்னா, உதயமூர்த்தி என ஒவ்வொரு கதாபாத்திரமும் அந்தப் பெயர்களும் நம் மனசில் இருந்து விலகாது ஒட்டிக்கொண்டே இருக்கும். ஏதேனும் சேதி சொல்லிக்கொண்டே இருக்கும். இது பாலசந்தரின் தனித்துவம். 
டைரக்‌ஷன் டச் என்றொரு வார்த்தை சினிமாவில் பிரபலம். இந்த டைரக்‌ஷன் டச் என்பதை சாமான்ய ரசிகர்களுக்கும் உணர்த்தி, கைத்தட்ட வைத்த பெருமை இயக்குநர் பாலசந்தரையே சேரும். ஒருவாரம் என்பதை படபடவெனப் பறக்கும் காலண்டர் பேப்பராக இல்லாமல், ஒருநாள் கதவிடுக்கில் குமுதம் வரும். இன்னொரு நாள் விகடன் வரும். அடுத்தநாள் இதயம் பேசுகிறது வரும். மறுநாள் சாவி வரும். ஒருவாரத்தை இப்படிக் காட்டியிருப்பார். சிந்து ஊருக்குப் போய்விட்டாள் என்பதை, கடற்கரையில் ஒருவருக்கொருவர் சட்டையை வரிசையாகப் பிடித்துக் கொண்டு ரயில் விளையாட்டு விளையாடுவதில் உணர்த்திவிடுவார். 
டெல்லிகணேஷ் பேசுகிற கெட்டவார்த்தையால் அருகில் உள்ள செடியே வாடிவிடுவதாகக் காட்டுவார்.  இப்படி இந்தியை வைத்துக் கொண்டு, ஆங்கிலத்தை வைத்துக்கொண்டு, ஒரு பொம்மையை வைத்துக்கொண்டு, மீசையை வைத்துக்கொண்டு, ஒரு கண் சிமிட்டலை வைத்துக்கொண்டு, ஒரு சிரிப்பை, ஒரு படாபட் மாதிரியான வார்த்தையை வைத்துக்கொண்டு வித்தை காட்டியிருக்கிறார் கே.பி. 
திருவள்ளுவரையும் பாரதியாரையும் சினிமாவில் அப்படி ரசித்து ரசித்துக் காட்டிக்கொண்டே இருந்தார் பாலசந்தர். அபூர்வ ராகங்கள் படத்தில் கேள்வியின் நாயகனே பாடலை வைத்துக்கொண்டே க்ளைமாக்ஸ் பண்ணியிருந்தார். அவள் ஒரு தொடர்கதையில், கால்மணி நேரம் திருமண மண்டபத்தில், மேளதாள வாத்தியங்களை வைத்துக்கொண்டு, எந்த வசனமும் இல்லாமலேயே க்ளைமாக்ஸை வைத்திருந்தார். எந்த டெம்ப்ளேட்டுக்குள்ளும் இல்லாமல் படமெடுத்தவர். அதேசமயம் எல்லா டெம்ப்ளேட்டுகளையும் சினிமாவுக்கும் அவரையடுத்து வந்தவர்களுக்கும் வழங்கிச் சென்றவர் பாலசந்தர்.
அவரின் நினைவுநாள் இன்று (23.12.18). இயக்குநர் சிகரத்தை, கே.பாலசந்தரை மனதில் நினைப்போம். அவருக்கும் அவரின் படங்கள் அனைத்திற்கும் ஓர் ராயல் சல்யூட் அடிப்போம்! 

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close