[X] Close

பெரிய ஆள் - சின்ன ஆள், பெரிய இடம் - சின்ன இடம்னு எதுவும் இல்லை: விஜய் சேதுபதி


vijay-sethupathi-at-super-singer

  • காவேரி மாணிக்கம்
  • Posted: 17 Dec, 2018 16:37 pm
  • அ+ அ-

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் நிகழ்ச்சி ‘சூப்பர் சிங்கர்’. கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் விஜய் சேதுபதி. அவருடன், ‘சீதக்காதி’ படத்தின் இயக்குநர் பாலாஜி தரணிதரனும் கலந்து கொண்டார்.

ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பான நிகழ்ச்சியில், விஷாலினி என்ற போட்டியாளர் ‘தகதகவென ஆடவா...’ பாடலைப் பாடினார். அதற்கு கமென்ட் செய்த விஜய் சேதுபதி, “பிரமாதம்... பிரமாதம்... எனக்கு இதைப்பற்றி எந்த அறிவும் கிடையாது. ஆனால், ரசிக்கத் தெரியும்னு நான் நம்புறேன்.

குழந்தைகளையே தெய்வம்னு தான் சொல்வாங்க. உங்க குரலில் அவ்வளவு பெரிய தெய்வீகம் இருக்கு. அவ்வளவு பெரிய தன்னம்பிக்கை இருக்கு. அந்த சத்தம் அவ்வளவு தெளிவா, நேரடியாக உள்ள இறங்குது. ரொம்ப அழகா இருக்கீங்க” என்றார்.

நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய பிரியங்கா, ‘விஜய் சேதுபதிகிட்ட நீங்க ஏதாவது சொல்லணுமா?’ என்று விஷாலினியிடம் கேட்டார். “எனக்கு ஏதாவது சொல்லுங்க. அதைக்கேட்டு நானும் கொஞ்சம் வளர்ந்துப்பேன்” என்றார்.

உடனே பார்வையாளர்கள் ஆரவாரம் எழுப்பினர். “குழந்தைங்க தான்டா பரிசுத்தமா பேசுவாங்க. அதனால் கேட்டுக்கலாம்” என்றார் விஜய் சேதுபதி.

“நான் இந்த மாதிரி பெரிய இடத்துக்கு வந்து, இந்த மாதிரி பெரிய ஆளுங்கள பார்த்ததே இல்லை” என்று கண்கலங்கியபடி சொன்னார் விஷாலினி. 

“பெரிய ஆளு - சின்ன ஆளு, பெரிய இடம் - சின்ன இடம்லாம் இல்லவே இல்ல. சத்தியமா சொல்றேன், என் வயசுக்கு நான் சொல்றேன். அது ஒருவருடைய அனுபவங்கள்தானே ஒழிய, பெரியவங்களா ஆக ஆக உங்களுக்கே அது புரிஞ்சிடும்” என்று அவருக்கு ஆறுதல் சொன்னார் விஜய் சேதுபதி.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close