[X] Close

விடாமல் துரத்திய விஜய் ரசிகர்கள்: ட்விட்டரிலிருந்து வெளியேறிய கருணாகரன்


actor-karunakaran-leaves-twitter

  • kamadenu
  • Posted: 17 Dec, 2018 13:24 pm
  • அ+ அ-

விஜய் ரசிகர்களால் ட்விட்டரிலிருந்து வெளியேறியிருக்கிறார் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரான கருணாகரன்.

நடிகர் கருணாகரன் சமூக வலைதளமான ட்விட்டரில் விறுவிறுப்பாக இயங்கும் சில நடிகர்களில் ஒருவர். சினிமா சார்ந்த பதிவுகள் மட்டுமல்ல அவ்வப்போது அரசியல் பதிவுகளையும் அவர் பதிவு செய்வார். திமுக சார்பு அரசியல் பார்வை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் விஜய் ரசிகர்களுக்கும் அவருக்கும் ஏற்பட்ட கருத்து மோதலால் தற்போது கருணாகரன் ட்விட்டர் தளத்திலிருந்தே விலகியிருக்கிறார்.

முன்னதாக கடந்த அக்டோபர் மாதம், நடிகர் விஜய் ரசிகர்கள் தனக்கு செல்போனிலும், வாட்ஸ் அப்பிலும் அவதூறாகத் திட்டி மெசேஜ் அனுப்புவதாகவும், மிரட்டுவதாகவும் நடிகர் கருணாகரன் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அது வாய்மொழிப் புகார் என்பதால் போலீஸார் ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பிரதமர் மோடி குறித்த மீம் ஒன்றை கருணாகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். அதற்கும் விஜய் ரசிகர்கள் அவரை திட்டித் தீர்த்தனர்.

கடைசியாக அவர், அதற்கு பதிலடியாக 'தளபதி தான் அடுத்த சி.எம்' என்று கடைசியாக ட்வீட் செய்திருந்தார். அரசியலில் தளபதி ஸ்டாலின் என்றால் திரையுலகில் தளபதி விஜய். எனவே, இதுவும் சர்ச்சையானது. இந்நிலையில் ட்விட்டர் பக்கத்தில் இருந்தே கருணாகரன் விலகியிருக்கிறார்.

சர்காரில் தொடங்கிய சர்ச்சை:

கடந்த அக்டோபர் 2-ம் தேதி சென்னையில் விஜய் நடித்த 'சர்கார்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது சர்ச்சையானது. அவரது கருத்தை சகலரும் விமர்சித்தனர். ஆனால் அதற்கு நடிகர் விஜய் எந்தப் பதில் கருத்தும் கூறவில்லை.

இந்நிலையில் விஜய் பேச்சு குறித்து நடிகர் கருணாகரன், "குட்டிக்கதை அரசியல்வாதிகளுக்கு மட்டுமா? அல்லது நடிகர்களுக்குமா? தகாத வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று உங்கள் ரசிகர்களிடம் சொல்லுங்கள் நண்பா" என்று ட்வீட் செய்திருந்தார். இது விஜய் ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தை உருவாக்கியது.

இதனால் விஜய் ரசிகர்கள் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் வந்து கடுமையாக விமர்சனம் செய்தனர். சிலர் கடுமையாக திட்டித் தீர்த்தார்கள். ரசிகர்களின் விமர்சனத்துக்குப் பதிலடியாக, "ஒரு நடிகரின் ரசிகர்கள் பதிவிடும் பின்னூட்டங்களே அந்த நடிகரின் தரத்தைத் தெரிவிக்கிறது" என்று மீண்டும் பதிவிட்டார் நடிகர் கருணாகரன்.

இதையடுத்து கருணாகரன் ட்வீட்டுக்குப் பதிலடியாக விஜய் ரசிகர்கள் அவருக்கு எதிராக ஹேஷ்டேக்கை உருவாக்கி தொடர்ச்சியாக திட்டித் தீர்த்தனர். அவரை தமிழன் இல்லை என்கிற அளவுக்கு விமர்சித்தனர்.

இதற்கும் பதிலடி கொடுத்த கருணாகரன் "நான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவனா என்ற முட்டாள்தனமான கேள்வியைக் கேட்காதீர்கள் குழந்தைகளே. நான் எப்போதாவது ‘சர்கார்’ தமிழ் தலைப்பா என்று கேட்டேனா. எனது அடுத்த கேள்வி தாய்மொழியில் இருக்கும். சர்கார் அடிமை தயாராக இருக்கிறீர்களா?" என்று பதிவிட்டிருந்தார்.

இந்த ட்வீட்டால் விஜய் ரசிகர்கள் மீண்டும் கோபமடைந்தனர். அவரது செல்போன் எண்ணை வலைதளம் முழுவதும் பதிவிட்டு, விமர்சிக்கிறவர்கள் இந்த எண்ணில் விமர்சிக்கலாம் என்று போட்டுவிட்டனர். இதனால் அவரது எண்ணுக்கு ஒரே நாளில் மட்டும் 1500-க்கும் மேற்பட்ட செல்போன் அழைப்புகள் வந்தன.

போனை எடுத்தாலே கண்டபடி எதிர்முனையில் திட்டத் தொடங்கியதால் கருணாகரனால் என்ன செய்வதென்றே தெரியவில்லை. மேலும் அவரது வாட்ஸ் அப்புக்கும் ஏகப்பட்ட வசவு, மிரட்டல் மெசேஜ்கள் வர இதற்குமேல் என்னால் தாங்க முடியாது. அனைவர் மீதும் புகார் கொடுப்பேன் என கருணாகரன் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே விஜய் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் வண்ணம் "மற்ற நடிகர்களின் ரசிகர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். எனது பெயரை வைத்து ஆபாசமான வார்த்தைகளை பயன்படுத்தாதீர்கள். ப்ளீஸ். இந்த சமூகத்தில் உருவாக்கப்படும் அச்சம் தேவையற்றது. இதை உணருங்கள்.

சமூகத்துக்காக உழையுங்கள். மலிவான வழிகளில் தற்காத்துக் கொள்ளாதீர்கள். வலிமையான வார்த்தைகொண்டு போரிடுங்கள். தொலைப்பேசி மிரட்டிலின் மூலம் அல்ல. வளருங்கள். மாநிலத்துக்காக, நாட்டுக்காக உழையுங்கள். தனி நபர்களுக்காக அல்ல. சமூகத்துக்காக" என்று ட்விட்டரில் பதிவிட்டுடார்.

நடிகர் விஜய் ரசிகர்கள் தனக்கு செல்போனிலும், வாட்ஸ் அப்பிலும் அவதூறாகத் திட்டி மெசேஜ் அனுப்புவதாகவும், மிரட்டுவதாகவும் நடிகர் கருணாகரன் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். 

ஆனால், இது சைபர் கிரைம் சம்பந்தப்பட்ட விஷயம். நீங்கள் புகார் அளிக்க வேண்டுமானால், எந்த எண்ணிலிருந்து மிரட்டல், அவதூறு பேச்சுகள் வந்தன, அதன் பதிவு, எண்கள் லிஸ்ட், வாட்ஸ் அப்பில் மிரட்டல், ஆபாசமாகத் திட்டுவது போன்ற பதிவு வந்திருந்தால் அதன் ஸ்க்ரீன் ஷாட் உள்ளிட்டவற்றை காப்பி எடுத்து புகாராக எழுதிக்கொண்டு வாருங்கள் என்று தெரிவித்தார்.

கருணாகரன் அவகாசம் வேண்டும் என்று கேட்க,  தாராளமாக டைம் எடுத்துக்கொள்ளுங்கள் வரும்போது புகார் கடிதம், அதற்கான ஆவணங்களுடன் வாருங்கள் என்று காவல் ஆணையர் கூறி அனுப்பி வைத்தார்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close