[X] Close

சேரன் ஜெயிக்கணும்! – பட்டுகோட்டை பிரபாகர் வாழ்த்து


cheran-pkp

இயக்குநர் சேரன்

  • வி.ராம்ஜி
  • Posted: 15 Dec, 2018 08:51 am
  • அ+ அ-

சேரன் எனும் படைப்பாளி ஜெயிக்கவேண்டும். ஒரு ரசிகனாக வாழ்த்துகிறேன் என்று எழுத்தாளர் பட்டுகோட்டை பிரபாகர் பதிவிட்டுள்ளார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்குநர் சேரன், திருமணம் – சில திருத்தங்களுடன் எனும் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தை விஜய்சேதுபதி அறிமுகப்படுத்தி வைத்தார்.

எழுத்தாளர் பட்டுகோட்டை பிரபாகர், தன் முகநூலில் சேரன் குறித்து பதிவிட்டு, தன் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

அதில் பதிவிட்டிருப்பதாவது:

பாரதி கண்ணம்மா, பாண்டவர் பூமி, பொற்காலம், ஆட்டோகிராஃப், வெற்றிக் கொடி கட்டு, தவமாய் தவமிருந்து என்று ஒவ்வொரு காட்சியும் தனித்துவத்துடன் செதுக்கப்பட்ட சேரனின் படங்கள் எனக்குப் பிடிக்கும்.

அவர் நடிப்பிலும் பின்னியெடுத்த சொல்ல மறந்த கதை, யுத்தம் செய் படங்களும் கவர்ந்தன.

ஹாலிவுட்டின் சார்லி சாப்ளின், இந்தி உலகின் ராஜ்கஃபூர் இவர்களின் சோக சாயல்கள் சேரனின் படங்களில் இருக்கும்.. அடித்தளத்தில் ஒரு படிப்பினைச் செய்தியை ஏந்தியபடி.

சேரன் நிஜத்தில் ஓர் உணர்ச்சிக் குவியலான ஆசாமி. பாசமோ, பிரியமோ, சோகமோ சற்று அதீதமாகவே வெளிப்படுத்துவார்.அந்தத் தூக்கலான உணர்ச்சியின் வெளிப்பாடு அவரின் படங்களிலும் இருக்கும். கொஞ்சம் ஒவராக செண்ட்டிமெண்ட்டைப் பிழிவார் என்று என்னிடம் சிலர் சொல்வதுண்டு.

அப்படிப்பட்டவர்கள் நிஜத்தில் நம்மிடையே இல்லையா? தேங்ஸ், ஸாரியை கண் கலங்க சொல்பவர்கள் நிறைய பேர் இன்னமும் உண்டு. இப்போதெல்லாம் நம்மிடையே செண்ட்டிமெண்ட் படங்களுக்கு அத்தனை வரவேற்பு இல்லை என்கிற மாயையை சமீபத்தில் உடைத்த படங்கள் கடைக்குட்டி சிங்கமும், அறமும், அருவியும், மேற்குத் தொடர்ச்சி மலையும், பரியேறும் பெருமாளும்.

சில வருடங்களாக அமைதியாய் தன்னைத் தயார் செய்துகொண்டு மீண்டும் வருகிறார் ' திருமணம் - சில திருத்தங்களுடன்' படத்தின் மூலம்.

இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றால்தான் சேரன் என்கிற நல்ல படைப்பாளியின் நல்ல படைப்புகள் தொடர்ந்து தமிழுக்குக் கிடைக்கும்.

இந்தப் படம் சிறப்பான வெற்றியடைய வேண்டுமென்று ஒரு ரசிகனாக வாழ்த்துகிறேன்.

இவ்வாறு பட்டுகோட்டை பிரபாகர் தன் வாழ்த்துகளை பதிவிட்டுள்ளார்.

 

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close