[X] Close

‘காலா’ ரிலீஸ் தேதி கவுரவ பிரச்சினையா?


kaala-release-is-prestige-issue-for-lyca-productions

  • kamadenu
  • Posted: 27 Mar, 2018 12:14 pm
  • அ+ அ-

பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘காலா’ படம், ஏப்ரல் 27ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த 1 ஆம் தேதியில் இருந்து புதிய படங்கள் எதையும் ரிலீஸ் செய்யாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது தயாரிப்பாளர்கள் சங்கம். மேலும், படப்பிடிப்புகள் நிறுத்தம், போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நிறுத்தம், சினிமா விழாக்களும் நடத்தக்கூடாது என சினிமா சார்ந்த எந்தப் பணிகளுமே நடைபெறவில்லை.

எனவே, ஏப்ரல் 27 ஆம் தேதி திட்டமிட்டபடி ‘காலா’ ரிலீஸாகுமா? என்ற கேள்வி எழுந்தது. முதல் காரணம், தயாரிப்பாளர் சங்கம் தரவேண்டிய தடையில்லா சான்று இன்னும் ‘காலா’ படத்துக்கு கிடைக்கவில்லை. இரண்டாவது காரணம், ஏற்கெனவே மார்ச் மாதம் ரிலீஸ் செய்யத் திட்டமிடப்பட்டிருந்த படங்களுக்கு முன்னுரிமை கொடுக்க தயாரிப்பாளர் சங்கம் திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்.

இதனால், ‘காலா’ ரிலீஸ் தள்ளிப்போகும் என ஊடகங்களில் செய்திகள் வெளியாக, ‘நாங்கள் அதிகாரப்பூர்வமாக ‘காலா’ ரிலீஸ் தேதி குறித்து எதையும் அறிவிக்கவில்லை’ என தெரிவித்தது படத்தை வெளியிடும் லைகா புரொடக்‌ஷன்ஸ். எப்படியும் தமிழ்ப் புத்தாண்டுக்குள் பிரச்சினைகள் முடிந்து பட வெளியீடு தொடங்கிவிடும், அதன்பிறகு தடையில்லா சான்றை வாங்கி திட்டமிட்டபடி ரிலீஸ் செய்துவிடலாம் என நினைத்திருக்கிறதாம் லைகா புரொடக்‌ஷன்ஸ். அதனால்தான், ரிலீஸ் தேதி குறித்து பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் இருக்கிறார்கள்.

அத்துடன், ‘காலா’ ரிலீஸ் தேதியை தன்னுடைய கவுரவப் பிரச்சினையாகவும் பார்க்கிறது லைகா. காரணம், ரஜினி நடிப்பில் லைகா தயாரித்துள்ள ‘2.0’ படத்தின் ரிலீஸ் தேதி பலமுறை அறிவிக்கப்பட்டு, அது தோல்வியில் முடிந்தது. இன்னும் அந்தப் படத்தின் ரிலீஸ் தேதி என்னவென்றே முடிவு செய்யப்படவில்லை. அதை தவிர்க்கத்தான் ‘காலா’வை வாங்கி, உடனடியாக ரிலீஸ் தேதியையும் அறிவித்தது லைகா.

மேலும், சாய் பல்லவி நடிப்பில் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள ‘கரு’ படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டு தள்ளிப்போய்க் கொண்டே இருக்கிறது. இத்தனைக்கும் பிரபுதேவாவை வைத்து ‘லக்‌ஷ்மி’ என அடுத்த படத்தையே எடுத்து முடித்துவிட்டார் ஏ.எல்.விஜய். எனவே, எக்காரணம் கொண்டும் ‘காலா’ ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்படக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறது லைகா.

சபாஷ் நாயுடு’, ‘இந்தியன் 2’, ‘கோலமாவு கோகிலா’, ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’, ‘வடசென்னை’, ‘செக்கச்சிவந்த வானம்’ ஆகிய படங்களைத் தற்போது தயாரித்து வருகிறது லைகா புரொடக்‌ஷன்ஸ்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close