தேவ் - திரை விமர்சனம்


காதலியின் பிரிவைத் தாங்க முடியாமல் விபத்தை ஏற்படுத்தி தன் உயிரை விடத் துணியும் இளைஞன் பின் அதிலிருந்து மீண்டு குணமாகி, மனபலத்துக்காக எவரெஸ்ட் சிகரம் ஏறினால் அப்போது பனிச்சரிவில் சிக்கி உயிருக்குப் போராடினால் அதுவே ‘தேவ்'.

பயணங்களை விரும்புபவர் கார்த்தி. நிறுவனத்தின் வளர்ச்சியே தன் வளர்ச்சி எனக் கருதுபவர் ரகுல் ப்ரீத் சிங். இவர்கள் இருவரின் சந்திப்பு நாளடைவில் காதலாகி கசிந்துருகி சின்னக் கருத்து வேறுபாடால் கண்ணீர் மல்கி பிரிய நேர்கிறது. அந்தப் பிரிவின் தனிமையை ஏற்க முடியாமல் இருவரும் எப்படி இணைகிறார்கள் என்பதை ரொம்பவே விரிவாகச் சொல்கிறது திரைக்கதை.

முழுக்கவே காதலின் உன்னதங்களைப் பேச வேண்டிய படம். சம்பந்தமே இல்லாத ஈகோ, தேவையில்லாத சண்டை, அர்த்தமே இல்லாத பிரிவு என லாஜிக் இல்லா அம்சங்களால் திரைக்கதை தடுமாறி நிற்கிறது.

கார்த்திக்கு  பழக்கப்பட்ட  கதாபாத்திரம்தான். ‘பையா' பாதி, ‘காற்று வெளியிடை' மீதியுமாக கார்த்தியின் கேரக்டர் ஸ்கெட்ச்சிலும் இயக்குநர் பெரிதாக மெனக்கெடவில்லை. ஆனாலும், படத்தை ஒட்டுமொத்தமாகத் தன் தோள்களில் சுமப்பதற்கு கார்த்தி தயாராகவே இருக்கிறார். கதையும், திரைக்கதையும் அதற்கு ஒத்துழைக்காததால் நல்ல அழகான ஆடைகளில் அம்சமாக வந்து போகிறார்.

x