[X] Close

’கரகாட்ட நாயகன்’ கங்கை அமரன் வாழ்க!


gangaiamaran-birthday

  • kamadenu
  • Posted: 08 Dec, 2018 11:02 am
  • அ+ அ-

வி.ராம்ஜி

வீட்டில் முன்னதாக ஒருவர் பிரபலம் அடைந்துவிட்டால், அதன் பிறகு வீட்டில் இருந்து இன்னொருவர் பிரபலமானால், ‘யார் தெரியும்ல இவரு’ என்று முன்னவரின் பெயர் சொல்லி, அவர்களின் உறவைச் சொல்லி இரண்டாமவரை அறிமுகப்படுத்துவார்கள். அதேபோல், பின்னதாக வாரிசுகள் பிரபலம் அடைந்தால், ஒருகட்டத்தில் வாரிசின் பெயரைச் சொல்லி, ‘இவரோட அப்பாதான் அவரு’ என்றும் சொல்ல ஆரம்பிப்பார்கள். ஆனால் இந்த இரண்டுமே உண்டுதான் என்றாலும், தனித்துவமான பெயரெடுத்து, புகழுடன் இருப்பவர்களில் ஒரு சிலரே உண்டு. அவர்களில் முக்கியமானவர்… கங்கைஅமரன்.

கங்கைஅமரன் இளையராஜாவின் தம்பியாக அறிமுகமானார். பிறகு அவர் எடுத்த அவதாரங்களெல்லாம் தசாவதாரத்தை விட அதிகம். இசை, பாடல், இயக்கம் என கலந்துகட்டி முன்னேறிக் கொண்டிருந்தவர்களில், கங்கைஅமரனுக்கு எப்போதுமே தனியிடம் உண்டு.

கவிஞர் வாலி எழுதிய பாடல்கள் பலவற்றை, இது கண்ணதாசன் எழுதுனதுப்பா என்று சொல்லுவார்களே. அதேபோல், கங்கைஅமரன் எழுதிய பல பாடல்களை, பலரது பெயர்களைச் சொல்லுவார்கள், கங்கை அமரன் பெயரைத் தவிர!

புதிய வார்ப்புகளின் தந்தன தந்தன தாளம் வரும் பாடல் இவர் எழுதியதுதான். கல்லுக்குள் ஈரம் படத்தின் சிறுபொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும் பாட்டு இவர் எழுதியதுதான். சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என்றொரு பாடல் என ஏகப்பட்ட பாடல்களை இன்றைக்கும் முணுமுணுத்துக்கொண்டிருக்கிறோம்.

அடி மானாமதுரையில என்று விஜயகாந்த் பாட்டு, செண்பகமே செண்பகமே, பாட்டு உன்னை உசுப்புதா, பூத்துப்பூத்து குலுங்குதடி பூவு, என் இனிய பொன் நிலாவே என்று எத்தனையோ பாடல்கள். அத்தனையும் சூப்பர் ஹிட்டு.

நிழல்கள், மூடுபனி, நெஞ்சத்தைக் கிள்ளாதே, முள்ளும்மலரும், வைதேகி காத்திருந்தாள், ரோசாப்பூ ரவிக்கைக்காரி, ஜானி, அலைகள் ஓய்வதில்லை, இன்று நீ நாளை நான், முந்தானை முடிச்சு, பயணங்கள் முடிவதில்லை, மெட்டி, விக்ரம், வெற்றிவிழா, துடிக்கும் கரங்கள் என இவர் பாட்டெழுதிய படங்கள், எல்லாமே நினைவில் தங்கியிருக்கும் படங்கள். இவர் பாடிய பூஜைக்கேத்த பூவிது இன்றைக்கும் மனதில் பூப்பூக்கவைக்கும்  பாடல். சின்னக்குயில் சித்ராவின் முதல் பாடல் இதுதான்.

கங்கை அமரன் டப்பிங் ஆர்ட்டிஸ்டாகவும் இருந்திருக்கிறார். சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். புதிய வார்ப்புகள் படத்தில் கே.பாக்யராஜ்தான் நாயகன். ஆனால் அந்தப் படத்துக்கு அவருக்கு கங்கை அமரனே குரல் கொடுத்திருப்பார்.

பாட்டு எழுதி, டப்பிங் கொடுத்து, பின்னணி இசையில் இளையராஜாவுடன் சேர்ந்து பணியாற்றியவர், தனியாகவும் இசையமைக்கத் தொடங்கினார். முதல் படம் சரியாகப் போகவில்லை. கே.பாக்யராஜின் முதல் படமான சுவரில்லாத சித்திரங்கள் படத்துக்கு இவர்தான் இசை.

இசையிலும் பாட்டு போலவேதான் பெயர் கிடைத்தது. பாடலின் இசையை ரசித்துவிட்டு, இது இளையராஜாப்பா என்றார்கள். சுவரில்லாத சித்திரங்கள் படத்தின் காதல் வைபோகமே இன்றைக்கும் எவர்கிரீன் பாடல். வாழ்வே மாயம் படத்தின் நீல வான ஓடையில் பாடலை மறக்கவே முடியாது. சட்டம் படத்தின் வா வா என் வீணையே பாடலும் மெளனகீதங்கள் படத்தின் மூக்குத்திப் பூமேலே பாடலும் இப்போதும் கேட்கலாம். எப்போதும் கேட்கலாம்.

பாட்டு எழுதியும் பாட்டுக்கு இசையமைத்தும் பெயரெடுத்த கங்கை அமரன், கோழிகூவுது படத்தின் மூலம் இயக்குநராகவும் நமக்கு அறிமுகமானார். கொக்கரக்கோ, பொழுதுவிடிஞ்சாச்சு, எங்க ஊரு பாட்டுக்காரன், செண்பகமே செண்பகமே, ஊருவிட்டு ஊரு வந்து, கோயில் காளை, சின்னவர் என இயக்குநராகவும் ஏராளமான படங்களை, வெற்றிப் படங்களைக் கொடுத்தார்.

இத்தனை வெற்றிகளுக்கும் மகுடமாக, கிரீடமாக, கிரீடத்தின் மயிலிறாக உயர்ந்து நிற்கும் படம்… கரகாட்டக்காரன். எடுத்துக்கொள்ளும் கதையில் ஒரு ஒழுங்கு, சொல்லும் விதத்தில் ஒரு நேர்த்தி, இரண்டரை மணி நேரப் படத்தில், காதல், காமெடி, சென்டிமெண்ட், பாடல்கள், சண்டைகள் என சகலத்தையும் நுழைத்து ஜொலித்த திரைக்கதை ஜாலம் என முத்திரை பதித்தார் கங்கை அமரன்.

மேடை நிகழ்ச்சிகளில் குறும்பும் குசும்பும் கொப்புளிக்கும். ஜாலியும் கேலியும் ரவுசு பண்ணும். அரிய தகவல்கள் பலவற்றை நாம் அறிவதற்காக தந்துகொண்டே இருக்கும் தகவல் சுரங்கமாகத் திகழ்பவர் கங்கை அமரன்.

வெங்கட்பிரபுவின் அப்பா, பிரேம்ஜியின் அப்பா என்றெல்லாம் பெயரெடுத்தாலும் கங்கைஅமரன், தனித்துவமிக்க படைப்பாளி. தனித்தன்மையுடன் பெயரும்புகழும் பெற்ற அற்புதக் கலைஞன்

உற்சாகம், உத்வேகம், கலகலப்பு, பொய்யற்ற பேச்சு, பேச்சில் இனிமை ப்ளஸ் காரம் என இப்போதும் எனர்ஜி அமரனாக இருக்கிறார் கங்கை அமரன். அவருக்கு இன்று பிறந்தநாள்.

கங்கை அமரன் வாழ்க என்று வாழ்த்துவோம்! மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள் கங்கைஅமரன் சார்!

 

 

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close