‘‘கமல் சாருக்கு ‘நாயகன்’ படத்துக்காக தேசியவிருது கிடைச்சப்போ எனக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதில் ‘இது நமக்குக் கிடைத்த தேசிய விருது’ என என்னையும் கவுரவப்படுத்தி இருந்தார். ஒரு ஒப்பனைக் கலைஞருக்கு இதுக்கு மேல வேற என்ன பெருமை வேண்டும்?’’ எனக் கண்கள் விரிய பரவசத்துடன் பேச ஆரம்பிக்கிறார் சலீம்.
கிட்டத்தட்ட அரை நூற்றாண்டை நோக்கி, திரைத்துறையில் ஒப்பனைக் கலைஞராக வலம் வருபவர். அதில், கால் நூற்றாண்டு காலம் கமல்ஹாசனுக்கும், மோகன்லாலுக்கும் பிரத்யேக ஒப்பனைக் கலைஞர். லேட்டஸ்ட்டாக, அஜித்தின் ‘விவேகம்’ படமும் அதன் ‘தலை விடுதலை’ பாடலுக்கான அஜித்தின் மேக்கப்பும் சலீமின் கைவண்ணம்.
நாகர்கோவில் இடலாக்குடி பகுதியில் இருக்கிறது சலீமின் வீடு. அவர் ஊருக்கு வந்திருக்கும் செய்தியறிந்து, குயில்கள் கூவுகின்ற ரம்யமான ஒரு காலைப் பொழுதில் அவரைச் சந்தித்தேன்.
திரைத்துறை எப்படி உங்களை ஈர்த்தது? அதுவும் ஒப்பனைக் கலைஞராக...