[X] Close

கமல் கேட்டது ‘நான் பார்த்ததிலே...’; நான் கொடுத்தது ‘புது மாப்பிள்ளைக்கு’! - இளையராஜா சொன்ன ரகசியம்


ilayaraja-kamal

கமல் - இளையராஜா

  • kamadenu
  • Posted: 02 Dec, 2018 10:12 am
  • அ+ அ-

வி.ராம்ஜி

நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான் பாடல் போல வேண்டும் என்று கேட்டார். நான் புதுமாப்பிள்ளைக்கு நல்ல யோகமடா’ என்ற பாட்டைக் கொடுத்தேன். இந்த ரெண்டுமே ஒன்றுதான் என்று இளையராஜா ரகசியம் உடைத்தார்.

சென்னை எத்திராஜ் கல்லூரியில் இளையராஜா 75 எனும் நிகழ்ச்சி நடைபெற்றது. இளையராஜாவின் பிறந்தநாளைக் கொண்டாடி, அவருடன் கலந்துரையாடி மகிழ்ந்தனர் மாணவிகள்.

இந்த விழாவில் இளையராஜா பேசும் போது தெரிவித்ததாவது:

அபூர்வ சகோதரர்கள் படத்தில், ஒரு காட்சிக்குத் தேவையான பாடல் பற்றிய பேச்சு வந்தது. அப்போது கமல், ‘இந்தப் பாட்டு ‘நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான் அழகியென்பேன், நல்ல அழகியென்பேன்’ என்ற பாட்டு மாதிரி வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அதன் பிறகு நான் அந்தக் காட்சிக்கு உரிய பாடலின் மெட்டைக் கொடுத்தேன். கேட்டுவிட்டு ‘ரொம்பப் பிரமாதம், இந்தப் பாட்டு புதுசா இருக்கு’ என்றார் கமல். உடனே நான், ‘என்ன புதுசு? நீங்க கேட்டதைத்தான் கொடுத்திருக்கேன்’ என்று சொன்னேன்.

அபூர்வ சகோதரர்கள் படத்தில் குறிப்பிட்ட அந்தப் பாட்டு, ‘புதுமாப்பிள்ளைக்கு... பாபரீ... நல்ல யோகமடா... பாபரீ’ என்ற பாட்டு. அப்படியா என்று ஆச்சரியப்பட்டுப் போனார் கமல்’’ என்று சொல்லிவிட்டு இளையராஜா, மாணவிகளை அழைத்து அந்தப் பாடலைப் பாடச் சொன்னார்.

உடனே ஐந்தாறு மாணவிகள், ‘புதுமாப்பிள்ளைக்கு... நல்ல யோகமடா’ என்ற பாடலைப் பாடினார்கள். பிறகு இளையராஜா, ‘நான் பார்த்ததிலே... அவள் ஒருத்தியைத்தான்... அழகியென்பேன்... நல்ல அழகியென்பேன்...’ என்று புதுமாப்பிள்ளை பாடலின் மெட்டிலேயே பாட... மொத்தக் கூட்டம் ஆர்ப்பரித்து கைத்தட்டியது.

 

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close