[X] Close

நீலாம்பரிக்கு பிறகு பட்சிராஜன்!


2-0-aksahaykumar

  • kamadenu
  • Posted: 30 Nov, 2018 14:30 pm
  • அ+ அ-

வி.ராம்ஜி

ரஜினிக்கு இணையான கதாபாத்திரம் என்பது பல வருடங்கள் கழித்து நடந்திருக்கிறது இப்போது. தற்போது வெளிவந்துள்ள 2.0 படத்தில் ரஜினிக்கு இணையாக அக்‌ஷய்குமார் கதாபாத்திரம், மிரட்டியிருக்கிறது.

ரஜினியின் ஆரம்ப காலப் படங்களில், கமலும் ரஜினியும் சேர்ந்து நடித்தார்கள். சில படங்களுக்கு கமல் நாயகனாக இருப்பார். ரஜினிக்கு முக்கியத்துவம் இருக்கும். அதேபோல், ரஜினி ஹீரோவாக இருக்கும் படத்தில் கமலுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும்.

இந்த காலகட்டத்தில், சிவகுமாருடன் ரஜினி சேர்ந்து நடித்தார். அப்போதும் இப்படி இருவருக்கும் சமபங்கீடு கதையில் கொடுக்கப்பட்டன. ஆயிரம் ஜென்மங்கள், ஆறு புஷ்பங்கள், சங்கர் சலீம் சைமன், மாங்குடி மைனர் மாதிரியான படங்களில் விஜயகுமார் ஹீரோவாக இருந்தாலும் ரஜினிக்கு ஹீரோவுக்கு உண்டான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

அடுத்தடுத்த காலங்களில் ரஜினி அசுரகதியில் வளர்ச்சி அடைந்தார். ஜெய்சங்கர், கராத்தே மணி, சுமன் முதலானவர்களுடன் நடித்தாலும் ரஜினிக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு கதை அமைக்கப்பட்டன.

இதன் பிறகு பல வருடங்கள் கழித்து, மிஸ்டர் பாரத், ரஜினிக்கு இணையாக சத்யராஜூக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தது. அதேபோல் விடுதலை படத்தில், சிவாஜி, விஷ்ணுவர்த்தனுடன் ரஜினி நடித்தார். இவர்களில் விஷ்ணுவர்த்தனுக்கு ஓரளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

ரஜினியின் நண்பராக சரத்பாபு நடித்த படங்கள் பல உண்டு என்றாலும் அந்த அளவுக்கு முக்கியத்துவம் இருக்காது. அதேபோல் சரண்ராஜ் நண்பராக பாட்ஷாவில் நடித்தாலும் சமபங்கு இருக்காது.

இதன் பிறகு ரஜினிக்கு இணையான ஒரு கேரக்டரில் நடித்தது ரம்யாகிருஷ்ணன்தான். படையப்பா படத்தில் ரஜினிக்கு நிகரான கைத்தட்டல்களைப் பெற்றார் நீலாம்பரி. முன்னதாக, மன்னன் படத்தில், விஜயசாந்தி ரஜினிக்கு இணையான கேரக்டரில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சந்திரமுகி ஜோதிகாவும் அப்படித்தான். ஆனால் இந்தப் படத்தைப் பொருத்தவரை ஜோதிகாவைச் சுற்றிப் பின்னப்பட்ட கதை என்பதாலும் ரஜினி கொஞ்சமாக, ஆனால் படம் முழுவதுமாக வருவது போல் திரைக்கதை அமைத்திருந்தார்கள்.

இதையடுத்து, ரஜினிக்கு நிகராக நடித்தது என்றால் அது ரஜினிதான். ஷங்கரின் எந்திரன் படத்தில் ரஜினிக்கு இணையாக மிரட்டியெடுத்திருப்பார் ரோபோ ரஜினி.

அந்த வகையில் ரஜினிக்கு இணையான கேரக்டர் ரம்யாகிருஷ்ணனுக்குத்தான் வலுவாகக் கிடைத்தது. இப்போது பல வருடங்களுக்குப் பிறகு, ஷங்கரின் 2.0 படத்தில் வசீகரனுக்கு இணையான கதாபாத்திரம் பக்ஷிராஜனுக்குக் கிடைத்திருக்கிறது. அதாவது ரஜினிக்கு இணையாக அக்‌ஷய்குமாருக்குக் கிடைத்திருக்கிறது. அக்‌ஷய்குமாரும், அந்தக் கேரக்டருக்கு அவ்வளவு அழகாக உயிர் கொடுத்திருப்பார்.

இப்படி ஒத்துக்கொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும் ஓர் மனம் வேண்டும். அது ரஜினியிடம் உண்டு என்று கொண்டாடுகிறார்கள் ரசிகர்கள்.

2.0 படத்தில் அக்‌ஷய்குமார் நடித்த பக்ஷிராஜன் கேரக்டரில் நடிப்பதற்கு கமல்ஹாசனைக் கேட்டதாக ஷங்கர் சொல்லியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close