[X] Close

கன்னட நடிகர் அம்பரீஷ் காலமானார்


ambarish

நடிகர் அம்பரீஷ்

  • kamadenu
  • Posted: 25 Nov, 2018 09:12 am
  • அ+ அ-

பிரபல கன்னட நடிகரும் காங்கிரஸ் ஆட்சியில் மத்திய அமைச்சராக இருந்தவருமான அம்பரீஷ் உடல் நலக்குறைவால் நேற்று 24ம் தேதி காலமானார். அவருக்கு வயது 66.

கன்னடத் திரையுலகில் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவர் அம்பரீஷ். ஏராளமான வெற்றிப் படங்களைக் கொடுத்தவர். இவருக்கு நேற்று இரவு 9 மணியளவில் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனே மருத்துவமனைக்கு அம்பரீஷைக் கொண்டு சென்றனர். அங்கு அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு, சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் சிகிச்சைப் பலனின்றி அம்பரீஷ் காலமானார் என மருத்துமவனை நிர்வாகத்தினர் அறிவித்தார்கள்.  

இது குறித்து பெங்களூருவில் உள்ள அந்தத் தனியார் மருத்துவமனையின் செய்தித்தொடர்பாளர், “வீட்டில் இருந்து நடிகர் அம்பரீஷை அழைத்து வரும்போது, சுயநினைவின்றி இருந்தார், அதன்பிறகு சுவாசம் இயல்புநிலைக்கு வருவதற்குத் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டோம். ஆனால், சிகிச்சை பலனின்றி, அவரின் உயிர் இரவு 10.15 மணிக்குப் பிரிந்தது” எனத் தெரிவித்தார்.

கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரகக் கோளாறால் அம்பரீஷ் அவதிப்பட்டு வந்தார். பெங்களூரூவில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார், சமீபத்தில் இதற்காக சிங்கப்பூருக்குச் சென்று சிகிச்சைகளும் எடுத்து வந்தார்.

நடிகர் அம்பரீஷ், முரட்டுக்காளை முதலான படங்களில் நடித்த சுமலதாவை மணந்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். அம்பரீஷ், ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர். இருவரும் 1978-ல் வெளியான ப்ரியா படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

கடந்த 1952-ம் ஆண்டு மே 29-ம் தேதி மாண்டியா மாவட்டம், தொட்டரசினகெரெவில் நடிகர் அம்பரீஷ் பிறந்தார். திரைப்படங்களில் வில்லன் நடிகராக அறிமுகமானவர், படிப்படியாக உயர்ந்து, ஹீரோவாக வலம் வந்தார். இதுவரை 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் அம்பரீஷ்.

அரசியலிலும் நடிகர் அம்பரீஷ் தனி முத்திரை பதித்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் எம்எல்ஏவாகவும், மக்களவை உறுப்பினராகவும், மத்திய அமைச்சராகவும் இருந்தார். ஜனதா தளம் கட்சியில் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கி, பிறகு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் அம்பரீஷ். மாண்டியா தொகுதி எம்எல்ஏவாக வெற்றி பெற்று சித்தராமையா அமைச்சரவையில் 2013 முதல் 2016 வரை வீட்டுவசதித் துறை அமைச்சராகப் பதவி வகித்து, சிறப்பாகப் பணியாற்றினார்.

கடந்த 2006-07-ம் ஆண்டு பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியில் செய்தி மற்றும் ஒளிபரப்புத்துறை இணையமைச்சராக நடிகர் அம்பரீஷ் இருந்தார். காவிரிப்  பிரச்சினை காரணமாக, தன்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

நடிகர் அம்பரீஷ் மறைவுக்கு முதல்வர் குமாரசாமி, முன்னாள் முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர் ஆழ்ந்த வருத்தமும், இரங்கலும் தெரிவித்துள்ளனர். அம்பரீஷ் இறந்த செய்தி அறிந்ததும், முதல்வர் குமாரசாமி, சித்தராமையா இருவரும் மருத்துவமனைக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.

நடிகர் அம்பரீஷின் உடல் பொதுமக்கள் மற்றும் ரசிகர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close