[X] Close

'ஆயிரத்தில் ஒருவன் 2' எடுக்க வேண்டும்: இயக்குநர் செல்வராகவன் ஆசை


director-selvaraghavan-tweets

  • kamadenu
  • Posted: 24 Nov, 2018 18:23 pm
  • அ+ அ-

'ஆயிரத்தில் ஒருவன் 2' எடுக்க வேண்டும் என்ற தனது ஆசையை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார் இயக்குநர் செல்வராகவன்

செல்வராகவன் இயக்கத்தில் 2006-ம் ஆண்டு வெளியான படம் ‘புதுப்பேட்டை’. தனுஷ் நாயகனாக நடித்த இப்படத்தில் சினேகா, சோனியா அகர்வால், அழகம் பெருமாள், பாலா சிங், முருகதாஸ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்த இப்படம், விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றது. ‘புதுப்பேட்டை’ வெளியாகி 12 ஆண்டுகள் கடந்துவிட்டாலும், இப்போது சினிமா ரசிகர்கள் “புதுப்பேட்டை போன்று ஒரு கேங்ஸ்டர் படம் வந்ததில்லை” என்று கொண்டாடி வருகிறார்கள்.
அவ்வப்போது, செல்வராகவனின் ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டு “புதுப்பேட்டை 2 எப்போது” என்று கேள்வி எழுப்புவார்கள். அதற்கு “விரைவில்.. கண்டிப்பாக ‘புதுப்பேட்டை 2’ நடக்கும்” என்று பதிலளித்து வந்தார்.

இந்நிலையில், இன்று (நவம்பர் 24) இயக்குநர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் “வெளியே எங்கு சென்றாலும் நண்பர்கள் ‘புதுப்பேட்டை  2 ‘எப்போது ? என்று அன்பாய் கேட்கின்றனர். நடக்கும் என சொல்வேன். ஆயின் என் மனதுக்குள் கேட்கும் தீரா ஓசை “ஆயிரத்தில் ஒருவன் 2 “ எடுக்க வேண்டும் என்பதுதான்.சோழன் பயணம் தொடர வேண்டும் என்பது என்னுள் புதைந்து கிடக்கும் நீண்ட நாள் தாகம்” என்று தெரிவித்திருக்கிறார்.

‘ஆயிரத்தில் ஒருவன்’ படம் வெளியான தருணத்தில் போதிய வரவேற்பைப் பெறாவிட்டாலும், இப்போதும் சினிமா ஆர்வலர்களால் கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. கார்த்தி, ரீமாசென், ஆண்ட்ரியா, பார்த்திபன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தார்கள்.

தற்போது சூர்யா, ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடிக்கும் ‘என்.ஜி.கே’ படத்தை இயக்குநர் செல்வராகவன் இயக்கி வருகிறார். விரைவில் இப்படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close