[X] Close

ரஜினி அனுப்பிய பொருட்களை கூட நமது தம்பிகள்தான் நிர்வகிக்கின்றனர்: கஸ்தூரி பேட்டி


kasturi-interview

  • kamadenu
  • Posted: 23 Nov, 2018 18:51 pm
  • அ+ அ-

‘கஜா’ புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு திரையுலகப் பிரபலங்கள், தன்னார்வலர்கள் எனப் பலரும் உதவி வருகின்றனர். இந்நிலையில், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளார் நடிகை கஸ்தூரி.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கஸ்தூரி, “சொல்ல முடியாத துயரில் உள்ள டெல்டா மக்களுக்கு உதவிகளை அள்ளிக்கொடுக்கும் உயர்ந்த உள்ளங்களை வாழ்த்துகிறேன்.  என்னால் முடிந்த அளவில், 12 லட்ச ரூபாய் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களைப் பாதிக்கப்பட்டப் பகுதிகளுக்கு அனுப்பி, நானும் நேரடியாகப் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் செல்ல உள்ளேன்.

1000 குடும்பத்திற்குத் தேவையான அதிநவீன வாட்டர் ஃபில்டர் மற்றும் போர்வைகள், கொசு மருந்து, காய்ச்சல் நிவாரணி மாத்திரைகள், சானிடரி நாப்கின்கள் அடங்கிய லாரியை அனுப்புகிறோம்.

உணவுப் பொருட்கள், மருத்துவ உதவி போன்றவை பலதரப்புகளில் இருந்து வந்துகொண்டிருக்கும் வேளையில், குடிநீர்ப் பற்றாக்குறை பூதாகரமாகத் தலையெடுத்துள்ளது. இன்னும் நாட்கள் செல்லச் செல்ல சுத்தமான, பாதுகாப்பான குடிநீர் மிகப்பெரிய தேவையாக இருக்கப் போகிறது. இதற்கு அத்தியாவசியமான 1000 நீர் சுத்திகரிப்புக் கருவிகளை அனுப்புகிறோம்.

இந்த சுத்திகரிப்புக் கருவிகள் (syphon filter) பேரிடர் காலத்தில் பயன்படுத்த மிகவும் உகந்தவை. எங்கும் எடுத்துச் செல்லலாம், சுலபமாகப் பயன்படுத்தலாம். தண்ணீர் எவ்வளவு மாசுபட்டிருந்தாலும், தெளிந்த பாதுகாப்பான சுத்தமான குடிநீராக மாற்றிவிடும். கொதிக்கவைக்க வேண்டிய அவசியமில்லை.

பிளாஸ்டிக் பாட்டில்களையும் கேன்களையும் நாடவேண்டியதில்லை. இரண்டு வருடங்களுக்குக் குறையாமல், செலவில்லாமல் குடிநீரை சுத்தப்படுத்திக் கொள்ளலாம். வெளிநாட்டில் மட்டுமே இப்போதைக்குக் கிடைக்கிறது. இங்கு நம் பயன்பாட்டிற்காக ஆயிரம் ஃபில்டர்களை உடனடியாகத் தயாரித்து அனுப்பியிருக்கும் சென்னை ராமா வாட்டர் ஃபில்டர் நிறுவனத்திற்கு நன்றி.

மேலும், ரஜினி அனுப்பிய பொருட்களைக் கூட நமது தம்பிகள்தான் நிர்வகிக்கின்றனர். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், முன்னாடி இருந்த  பேரிடர்களைவிட, இந்த முறை தமிழக அரசின் அணுகுமுறை நன்றாக இருக்கிறது.  முதல்வர் ஹெலிகாப்டரில் சென்று பார்த்தார் என்றால், அவர் ஒரே நேரத்தில் எல்லாரையும் பார்க்கணும்னு நினைச்சு இருக்கலாம். இருந்தாலும், அவர் தரை மார்க்கமாக வந்து பார்த்தா நல்லாத்தான் இருக்கும்.

அங்கு ராணுவ உதவி அவசியத் தேவை. மத்திய அரசு இன்னும் வேகமாகச் செயல்படணும். நமக்குத் தெரியாத ஆட்கள் மூலமாக உதவிகள் போய்ச்சேர்வதைவிட, தெரிந்தவர்கள் மூலமாக போய்ச் சேர்வது நல்லது” என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close