[X] Close

அஜித் சிறந்த மனிதர்; நடமாடும் கடவுள்! - உருகுகிறார் நடிகர் மைம் கோபி


ajith-mim-gopi

அஜித் - மைம் கோபி

  • kamadenu
  • Posted: 20 Nov, 2018 11:32 am
  • அ+ அ-

வி.ராம்ஜி

எத்தனையோ நடிகர்களுடன் நடித்திருக்கிறேன். ஆனால் அஜித் மாதிரி ஒரு சிறந்த மனிதரை இதுவரைப் பார்த்ததில்லை. அவரை நடமாடும் கடவுள் என்றுதான் சொல்லவேண்டும் என்று நடிகர் மைம் கோபி மனமுருகித் தெரிவித்தார்.

நடிகர் மைம் கோபி, தனியார் இணையதளம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் தெரிவித்ததாவது:

ரஜினி, விஜய்யுடன் நடித்திருக்கிறேன். இப்போது விஸ்வாசம் படத்தில் அஜித்துடன் நடித்து வருகிறேன். அஜித் மாதிரி ஒரு மனிதரைப் பார்ப்பது ரொம்பவே அபூர்வம். மற்றவர்கள் நன்றாக இருக்கவேண்டும் என்று வாழ்த்துவது ஒரு சம்பிரதாயம். ஆனால் அஜித்திடம் இந்த சம்பிரதாய வார்த்தைகளெல்லாம் இல்லை. மனப்பூர்வமாக எல்லோரும் நன்றாக இருக்கவேண்டும் என்று நினைப்பவர் அஜித்.

லைட்மேன், சின்ன வேலைக்காரர், பெரியவேலைக்காரர் என்கிற வித்தியாசமெல்லாம் அவரிடம் இல்லை. அவர் உட்கார்ந்திருக்கும் போது நானோ அல்லது வேறு யாராவதோ அவருக்குப் பக்கத்தில் சென்றால், சட்டென்று எழுந்துவிடுவார். ஒரு நாற்காலியை அவரே போட்டு, உட்காருங்க உட்காருங்க என்று சொல்லுவார். நாம் உட்கார்ந்த பிறகுதான் அஜித் உட்காருவார்.

அதேபோல, வீட்ல எல்லாரும் நல்லாருக்காங்களா? எத்தனை பசங்க? என்ன படிக்கிறாங்க? அப்பா அம்மாலாம் நல்லாருக்காங்களா? என்றெல்லாம் விசாரிப்பார். எல்லாரும் நல்லாருக்கணும் என்று நினைப்பார். எல்லார்கிட்டயும் அன்பு காட்டவேண்டும் என்று ஆசைப்படுவார். அப்படியே அன்புடன் பழகுவார்.

அஜித்திடம் எந்த ஆர்ப்பாட்டமும் இருக்காது. தான் பெரியநடிகர் என்கிற பந்தாவெல்லாம் காட்டமாட்டார். ரொம்பவே எளிமையானவர். யார் கேட்டாலும் அவர்களுடன் போட்டோ எடுத்துக்கொள்ளுவார். கடிந்து பேசி நான் பார்த்ததே இல்லை.

படப்பிடிப்பில் யாராவது விழுந்துவிட்டார்களென்றால், அந்த இடத்துக்கு முதல் ஆளாக ஓடிவந்து நிற்பது அஜித் சாராகத்தான் இருக்கும். அவர்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்துவிட்டுத்தான், அங்கிருந்து நகருவார். மிகச்சிறந்த மனிதர் அவர். அஜித், நடமாடும் கடவுள்.

இவ்வாறு மைம் கோபி தெரிவித்தார்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close