“என்னை மதுரைக்காரனாக நினைப்பது பாக்கியம்” - விஷால்


“என்னை மதுரைக்காரனாக நினைப்பதை பாக்கியமாக கருதுகிறேன்” என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

மதுரையில் தனது ரசிகர் மன்ற நிர்வாகியின் திருமணத்தில் கலந்துக் கொண்டார் விஷால். அதனைத் தொடர்ந்து மீனாட்சியம்மன் கோயிலுக்கும் சென்று தரிசனம் செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசியது: “மதுரைக்கு வந்துவிட்டு மீனாட்சியம்மன் கோயிலுக்கு வராமல் எப்படி ஊருக்கு போக முடியும். அப்படிச் சென்றால் அம்மா வீட்டிற்குள் சேர்க்க மாட்டார்கள். அவரும் ஒரு புடவை ஒன்றைக் கொடுத்துவிட்டார். அதை கொடுத்து சாமி தரிசனம் செய்தேன்.

ஒவ்வொரு முறை இந்தக் கோயிலுக்கு வரும்போதும் புதிதாக உணர்வேன். நல்ல உழைக்கணும், சமுதாயத்துக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற உணர்வைக் கொடுக்க கூடிய முக்கியமான கோயில் இது. கோயிலில் வயதானவர்கள் பலரும் ‘நீ நல்லா இருக்கணும், நல்லா வரணும்’ என்று சிரித்த முகத்துடன் ஆசிர்வாதம் செய்தார்கள்.

நிறைய பேர் சொல்லும்போது எனக்கு கிடைத்த பாக்கியமான கருதுகிறேன். இது என்னை அடுத்தடுத்த படங்கள் சிறப்பாக பண்ண வேண்டும் என்று ஊக்கப்படுத்துகிறது. இங்கு இருக்கும் பலரும் என்னை மதுரைக்காரன் என்று நினைக்கிறார்கள். அதுவே பெரிய பாக்கியமாக நினைக்கிறேன்.

நடிகர் சங்க கட்டிடத்தை பொறுத்தவரை வழக்குகள் மற்றும் கொரோனாவால் 9 ஆண்டுகளாகிவிட்டது. இன்னும் நான்கு மாதங்களில் இந்தக் கட்டிடம் பெரிதாக வரும்” என்றார் விஷால்.

x