ஸ்ரீதேவிக்கு பிடித்த கோயிலில் ஜான்வி கபூர் வழிபாடு


சென்னை: நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், இந்திப் படங்களில் நடித்து வருகிறார். அவர் ராஜ்குமார் ராவுடன் நடித்துள்ள ‘மிஸ்டர் அண்ட் மிஸஸ் மஹி’ வரும் 31-ல் வெளியாக இருக்கிறது. ஜூனியர் என்டிஆருடன் நடிக்கும் ‘தேவரா’ படம் மூலம் அவர் தென்னிந்திய சினிமாவுக்கும் வர இருக்கிறார். இந்நிலையில் சென்னைக்கு வந்த ஜான்வி கபூர், சேப்பாக்கத்தில் நடந்த ஐபிஎல் இறுதிப்போட்டியை கண்டு ரசித்தார். பின்னர் சென்னையில் நடிகை ஸ்ரீதேவி அடிக்கடி செல்லும் தி.நகர் முப்பாத்தம்மன் கோயிலுக்கு, தனது சித்தியும் நடிகையுமான மகேஸ்வரியுடன் சென்று வழிபட்டார்.

அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‘முதன்முறையாக முப்பாத்தம்மன் கோயிலுக்கு வந்தேன். சென்னையில் அம்மாவுக்கு பிடித்த இடம் இது’ என தெரிவித்துள்ளார். சமீபத்தில், ஜான்வி அளித்த பேட்டி ஒன்றில், தான் ஆன்மிகம் பக்கம் அதிகம் திரும்ப அம்மாதான் காரணம் என்று கூறியிருந்தார்.