ஊட்டி நாய் கண்காட்சி நேற்று நிறைவடைந்த நிலையில், சிறந்த நாயாக நடிகர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனின் நாய் தேர்வு செய்யப்பட்டது.
கோடை விழாவின் ஒரு பகுதியாக தென்னிந்திய கென்னல் கிளப் சார்பில் 137-வது நாய்கள் கண்காட்சி, ஊட்டி அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் கடந்த மூன்று நாட்கள் நடைபெற்றது. இந்த கண்காட்சியில் ஹோண்டு, லேப்ரடார், ஜெர்மர் ஷேப்பர்டு, பெல்ஜியன் மாலினாய்ஸ், டாஸ் ஹவுண்ட், கோல்டன் ரீட்டிவர், கிரேட் டேன், பீகிள், சிஹூஹா, நாட்டு ரக நாய்களான ராஜபாளையம், சிப்பிப் பாறை, கோம்பை, கன்னி உட்பட 56 ரகங்களில் 450-க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்றன. பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.
போட்டியின் நடுவர்களாக டி.கிருஷ்ண மூர்த்தி, மலேசியாவை சேர்ந்த கோபால கிருஷ்ணன் ஆகியோர் பணியாற்றினர். கண்காட்சியின் இறுதி நாளான நேற்று ‘ஆண்டின் சிறந்த நாய்’ விருது வழங்கப்பட்டது. இதில், நடிகர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரனுக்கு சொந்தமான இங்கிலீஷ் செட்டர் ரக நாய், சிறந்த நாயாக தேர்வு செய்யப்பட்டது. ஜப்பானை சேர்ந்த நடுவர் சந்தோஷி இந்த நாயை தேர்வு செய்தார்.
மேலும், கொல்கொத்தாவை சேர்ந்த ராய் என்பவருக்கு சொந்தமான டாபர்மேன் ரக நாயை தென்னாப் பிரிக்க நடுவர் மைக்கெல் தேர்வு செய்தார். ஏற்பாடுகளை தென்னிந்திய கென்னல் கிளப் தலைவர் ரஜினி கிருஷ்ணமூர்த்தி, செயலாளர் மோத்தேஸ் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.