[X] Close

‘கஜா’ புயல் பாதிப்பு: சிவகார்த்திகேயன் ரூ.20 லட்சம் நிதியுதவி


sivakarthikeyan-help-for-gaja-cyclone

  • kamadenu
  • Posted: 19 Nov, 2018 17:41 pm
  • அ+ அ-

‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு, 20 லட்ச ரூபாய் நிதியுதவி அளிக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.

‘கஜா’ புயலால் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய டெல்டா மாவட்டங்கள் பெரும் அழிவைச் சந்தித்துள்ளதாக விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். பல ஆண்டுகளாக செலவிட்டு வளர்த்த தென்னை மரங்கள், வாழை, கரும்பு உள்ளிட்டவை பெரும் சேதமடைந்துள்ளன. அதிலிருந்து விவசாயிகள் மீள பல ஆண்டுகள் ஆகும். ஆடுகள், மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளும் இறந்துள்ளன.

இந்தப் புயலால் மொத்தம் 1 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. புயல் மற்றும் கனமழை காரணமாக இதுவரை 45 பேர் உயிரிழந்துள்ளனர். 347 மின் மாற்றிகள் சேதமடைந்துள்ளன. 39,938 மின் கம்பங்கள் விழுந்துள்ளன.

3,559 கி.மீ. நீளமுள்ள மின் கம்பிகள் சேதமடைந்துள்ளன. 56,942 குடிசை வீடுகள் முழுமையாகவும், 3,404 குடிசை வீடுகள் பகுதியாகவும், 30,328 ஓட்டு வீடுகளும் சேதமடைந்துள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாழ்வான பகுதிகளில் இருந்து 2 லட்சத்து 49 ஆயிரத்து 83 பேர், 493 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

‘கஜா’ புயலில் இருந்து மீண்டுவர பலரும் தங்களால் ஆன உதவிகளைச் செய்து வருகின்றனர். சூர்யா, கார்த்தி, ஜோதிகா உள்ளிட்ட நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் 50 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளனர். தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இந்த உதவி செய்யப்பட இருக்கிறது. மேலும், நடிகர் விஜய் சேதுபதியும் 25 லட்ச ரூபாய் நிவாரண உதவியாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் 20 லட்ச ரூபாய் நிதியுதவி அளிக்கிறார். 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்களைத் தன்னுடைய ரசிகர் மன்றத்தினர் மூலம் பாதிக்கப்பட்டுள்ளப் பகுதிகளுக்குக் கொண்டு சேர்த்துள்ள சிவகார்த்திகேயன், முதலமைச்சர் நிவாரணி நிதிக்கு 10 லட்ச ரூபாய் அளிக்கிறார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close