யூடியூப் மூலம் பிரபலமான விஜே சித்து, சில படங்களில் சிறு வேடங்களில் நடித்து வந்தார். அவர் இப்போது ஹீரோவாக நடித்து இயக்கும் படம் ‘டயங்கரம்’. தனது யூடியூப் வீடியோக்களில் பிரபலமாகப் பயன்படுத்திய வசனத்தையே படத்தின் தலைப்பாக வைத்துள்ளார். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது.
படம் பற்றி விஜே சித்து கூறும்போது, “சினிமா எப்போதுமே எனது கனவு. யூடியூப்புக்காக வீடியோஸ் எடுக்கிற இடத்தில் இருந்து செட்டில் ஆக்ஷன் சொல்கிற இடத்துக்கு வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ‘டயங்கரம்’ படம் மட்டும் இல்லை. அது என் குரல், என் கோபம், என் ஸ்டைல், என் வாழ்க்கை, உங்களுடன் அதைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. இந்த படம் தற்போது பிரி புரொடக்ஷனில் இருக்கிறது. விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது” என்றார். மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.