[X] Close

ரூ.4.51 கோடி ஜிஎஸ்டி குறைப்பு சலுகையை வாடிக்கையாளர்களுக்கு அளிக்காத ஸ்டார்பக்ஸ்


4-51

  • kamadenu
  • Posted: 01 May, 2019 08:47 am
  • அ+ அ-

டாடா ஸ்டார்பக்ஸ் நிறுவனம் ரூ. 4.51 கோடி அளவுக்கு ஜிஎஸ்டி குறைப்பு சலுகையை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கத் தவறியது குறித்து விசாரிக்கப்படும் என்று ஜிஎஸ்டி விசாரணை குழு தெரிவித்துள்ளது.

ஸ்டார்பக்ஸ் விற்பனை செய்யும் காபி உள்ளிட்ட பானங்கள் மீதான வரி 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. இந்த வரிக்குறைப்புக்குப் பிறகும் ஸ்டார் பக்ஸ் நிறுவனம் விலையைக் குறைக்கவில்லை என்று விசாரணைக் குழு தெரிவித்துள்ளது. டாடா ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தில் டாடா குழுமம் மற்றும் சர்வதேச அளவில் பிரபலமான சங்கிலித் தொடர் நிறுவனமான ஸ்டார் பக்ஸ் ஆகிய இரு நிறுவனங்களும் சம அளவில் பங்குகளை வைத்துள்ளன. 2017-ம் ஆண்டு நவம்பர் 15-ம் தேதி 18 சதவீத வரி 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. ஆனால் இந்த வரிக் குறைப்பின் பலனை ஸ்டார் பக்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்குத் தரவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து ஜிஎஸ்டி கவுன்சிலின் இயக்குநரகம் விசாரணை நடத்தி, வரி குறைப்பு பலனை அளிக்காததால் ரூ. 4.51 கோடி தொகையை ஸ்டார் பக்ஸ் லாபம் ஈட்டியுள்ளதாக தெரிவித்தது. இந்தப் புகாரை ‘தேசிய முறையற்ற வகையில் லாபமீட்டுவதை விசாரிக்கும் ஆணையம் (என்ஏஏ)’ ஆராய்ந்து இதற்குரியை தண்டனையை அளிக்கும் என்று தெரிகிறது.

இதுகுறித்து ஸ்டார்பக்ஸ் செய்தித் தொடர்பாளரிடம் விசாரித்தபோது, மிகவும் பொறுப்புள்ள நிறுவனமாக ஸ்டார் பக்ஸ் செயல்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக உள்நாட்டு சட்ட விதிமுறைகள், கட்டுப்பாடுகள் மிகச் சிறப்பாக கடைப்பிடிக்கப்படுகின்றன. இந்நிறுவனம் 2012-ல் செயல்பாடுகளைத் தொடங்கியது. மும்பை, டெல்லி, என்சிஆர் பிராந்தியம், ஹைதராபாத், சென்னை, பெங்களூரு, சண்டீகர், புனே, கொல்கட்டா உள்ளிட்ட நகர்களில் 140 விற்பனையகங்கள் உள்ளன.

அரசு வரிக் குறைப்பு செய்தபிறகும் விலையைக் குறைக்காதது குறித்து எழுந்த புகாரைத் தொடர்ந்து இது குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டது. 18 சதவீதமாக வரி இருந்தபோது உள்ளீட்டு வரி திரும்பப் பெறுவது (இன்புட் டாக்ஸ் கிரெடிட்) அனுமதிக்கப்பட்டது. இதனால் விலை உயர்ந்தபோதிலும் நிறுவனங்கள் அரசு அளிக்கும் சலுகை மூலம் ஈடுகட்டி வந்தனர். உள்ளீட்டு வரியை திரும்பப் பெற முடியாத சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. இதனால் விலை ஏற்றத்தை ஈடுகட்டும் வகையில் குறைக்கப்பட்ட வரி விகிதத்துக்கேற்ப விலையை நிர்ணயித்தனர். இதனால் ஜிஎஸ்டி வரி குறைப்புக்கு முன் (18%) மற்றும் வரி குறைப்புக்குப் பின் (5%) என்ற நிலை இருந்தது. இதனால் வரி குறைப்புக்கு முந்தைய விலையே வரி குறைப்புக்குப் பிறகும் நீடித்தது என்று அவர் தெரிவித்தார்.

இவ்விதம் வரி குறைப்பு சலுகை தொகையை வாடிக்கையாளர்களுக்கு வழங்கத் தவறியிருந்தால் அந்தத் தொகையை நுகர்வோர் நல நிதியத்துக்கு அளிக்குமாறு கூறப்பட்டது. ஏற்கெனவே டோமினோஸ் பிஸா தயாரிக்கும் ஜூபிலியன்ட் ஃபுட்வொர்க்ஸ் நிறுவனம் வரி குறைப்பின் பலனை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கவில்லை. இந்நிறுவனம் ரூ. 41.42 கோடி அளவுக்கு வரி சலுகை பலனை அளிக்கவில்லை என குழு குறிப்பிட்டிருந்தது.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close