[X] Close

சம்பளமின்றி ஊழியர்கள் பரிதவிப்பு; ஜெட் ஏர்வேஸ் ஏலம் முடிந்த பிறகே கூடுதல் நிதி: வங்கிகள் கூட்டமைப்பு திட்டவட்டம்


  • kamadenu
  • Posted: 28 Apr, 2019 09:26 am
  • அ+ அ-

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் ஏல நடைமுறைகள் முடிந்த பிறகே கூடுதல் நிதி அளிக்க முடியும் என்று வங்கிகள் கூட்டமைப்பு திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. இதனால் ஊழியர்களுக்கு சம்பளம் கிடைப்பது கேள்விக்குறியாகிவிட்டது.

நிறுவனத்துக்கு ஓரளவு அவசர கால நிதியை அளிக்குமாறு ஜெட்ஏர்வேஸ் நிறுவன பங்குதாரர்கள் மற்றும் வங்கிகள் கூட்டமைப்பிடம் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி வினய் துபே கோரிக்கை விடுத்தார். ஆனால் கூடுதல் நிதி ஒதுக்குவது தற்போது சாத்தியம் இல்லை என்று வங்கிகள் கூட்டமைப்பு கைவிரித்துவிட்டது. ஏல நடைமுறை முடிந்த பிறகே கூடுதல் நிதி அளிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. இதனால் ஊழியர்களுக்கு ஓரளவு சம்பளத்தை அளிக்கலாம் என்று சிஇஓ மேற்கொண்ட முயற்சிகளும் பலனற்றதாகிவிட்டது.

புதிய நிறுவனம் பொறுப்பேற்று அதற்கான இயக்குநர் குழு செயல்படத் தொடங்கினால்தான் நிறுவனத்தின் எதிர்காலம் தெரியவரும். அப்போதுதான் கூடுதல் நிதி ஒதுக்குவது குறித்து ஆராய முடியும் என்று கூறிவிட்டது.

நிறுவனத்தின் பிரதான முதலீட்டாளர்களான நரேஷ் கோயல், எதியாட் ஏர்லைன்ஸ் ஆகியோரிடமும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க கூடுதல் நிதி அளிக்குமாறு விடுத்த கோரிக்கைகளுக்கு சாதகமான பதில் ஏதும் கிடைக்கவில்லை.

ஊழியர்களுக்கு சம்பளம் அளிப்பதற்காக நிறுவன தலைமை பல்வேறு முயற்சிகளை கடைசி கட்டமாக மேற்கொண்டது. இதில் வங்கிகள் கூட்டமைப்பிடம் பலகட்டங்களாக பேச்சு நடத்தியபோதிலும் வங்கி கூட்டமைப்பு தற்போதைக்கு கூடுதல் நிதி அளிக்க முடியாது என்பதில் உறுதியாக இருந்துவிட்டது. அதேசமயம் முதலீட்டாளர்களான நரேஷ் கோயல், பெருமளவு பங்குளை வைத்துள்ள எதியாட் நிறுவனமும் உறுதியாக எந்த உத்தரவாதமும் அளிக்காததால் பணம் கிடைக்கவில்லை. இதனால் ஊழியர்களுக்கு சம்பளம் அளிக்க முடியவில்லை என ஊழியர்களுக்கு எழுதிய கடிதத்தில் வினய் துபே தெரிவித்துள்ளார்.

மே 10-ம் தேதி வரை கெடு

 கடந்த வாரம் அகில இந்திய ஜெட் ஏர்வேஸ் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் சங்கத்தின் தலைவர் கிரண் பவாஸ்கர், தலைமைச் செயல் அதிகாரியை சந்தித்துப் பேசினார். அப்போது ஊழியர்கள் மே 10-ம் தேதி வரை பணிக்கு வரட்டும் என்றும் அதற்குள் நிறுவனத்தை ஏற்று நடத்த உள்ள நிறுவனம் குறித்த உறுதியான நிலவரம் தெரியவரும் என்றும் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஊழியர்களுக்கு ஒரு மாத சம்பளம் கூட வழங்கமுடியவில்லை. குறைந்தபட்சம் 50% சம்பளமாவது அளிக்க வேண்டும் என்று ஊழியர் சங்கம் விடுத்த கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. ஊழியர்கள் வேலைக்கு வருவதா அல்லது வர வேண்டாமா என்பதை அவர்களே முடிவு செய்து கொள்ளட்டும் என விட்டுவிடுமாறு நிர்வாக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பவாஸ்கர் தெரிவித்தார்.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் மிகவும் இக்கட்டான சூழலில் உள்ளதாக வினய் துபே குறிப்பிட்டுள்ளார். ஒரு பக்கம் ஜெட் ஏர்வேஸின் மதிப்பு காக்கப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது. மற்றொரு புறம் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. நிறுவனத்தின் பலமே ஊழியர்கள்தான் எனும்போது சம்பளம் தராமல் எவ்வளவு நாளைக்கு அவர்களை தக்க வைக்க முடியும். இந்த பிரச்சினையை முக்கியமான பங்குதாரர்களிடம் தெரிவியுங்கள் என்று வங்கிகள் கூட்டமைப்பு கூறுகிறது. ஏற்கெனவே மறு சீரமைப்பு திட்டத்தை ஏற்காத பங்குதாரர்கள் இப்போது இதை எப்படி ஏற்பார்கள் என்பது புரியவில்லை என்று துபே சுட்டிக் காட்டினார்.

400 ஊழியர்கள் ராஜினாமா

இதுவரை நிறுவனத்திலிருந்து 400 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். பைலட்டுகள், பொறியாளர்கள், பொதுமேலாளர்களுக்கு நிறுவனம் தர வேண்டிய சம்பள பாக்கி ரூ. 450 கோடியாகும். நிறுவனத்தில் அரசு தலையிட வேண்டும் என்ற கோரிக்கையும் விடப்பட்டது. அதுவும் எவ்வித பயனும் அளிக்கவில்லை.

வாக்களிக்கலாம் வாங்க

'சிந்துபாத்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close