[X] Close

ஜெட் ஏர்வேஸ் பயண நேரங்கள் பிற நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு: தற்காலிக ஏற்பாடு என அரசு விளக்கம்


  • kamadenu
  • Posted: 24 Apr, 2019 08:26 am
  • அ+ அ-

நிதி நெருக்கடியில் சிக்கி விமான சேவையை நிறுத்தியுள்ள ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் பயண நேரங்கள் பிற நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இவ்விதம் ஒதுக்கப்பட்டுள்ளது தற்காலிக ஏற்பாடே என மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜெட் ஏர்வேஸ் மீண்டும் செயல்படத் தொடங்கும்போது அந்த நிறுவனத்துக்கே அதன் விமான சேவை நேரங்கள் அளிக்கப்படும் என்று விமான அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜெட் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்ட குறிப்பிட்ட பயண சேவைகள் அனைத்தும் குறிப்பிட்ட விதிமுறைகளின் அடிப்படையில் பிற நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டதாக அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள், எஸ்பிஐ தலைமையிலான கடன் வழங்கிய குழு ஆகியன நிறுவனத்துக்கு அளிக்கப்பட்ட சர்வதேச பயண சேவை நேரத்தை பாதுகாக்குமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தன.

விமான சேவை நிறுத்தப்பட்டதால் பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை கருத்தில் கொண்டு கூடுதலாக விமானங்களை இயக்க வேண்டியுள்ளது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் இயக்கும் விமான வழித் தடங்களில் தற்போது வேறு விமானங்கள் இயக்கப்படவில்லை. இதனால் ஏற்பட்டுள்ள பிரச்சினையை சமாளிக்க தற்காலிக அடிப்படையில் இந்த வழித் தடங்களில் பிற நிறுவனங்கள் விமானங்களை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜெட் ஏர்வேஸ் இயக்கப்பட்ட விமான வழித் தடங்களை பிற நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்வதில் முழுமையான வெளிப்படைத் தன்மை பின்பற்றப்படும் என்றும் இக்குழுவை அரசு பிரதிநிதி, டிஜிசிஏ மற்றும் இந்திய விமான ஆணையம் உள்ளிட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் கண்காணிப்பர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு முற்றிலும் தற்காலிக அடிப்படையில் விமான சேவை நேரங்களை பிற நிறுவனங்களுக்கு அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close