[X] Close

எங்கள் எதிர்காலம் அரசின் கையில்: ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


  • kamadenu
  • Posted: 19 Apr, 2019 10:18 am
  • அ+ அ-

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை மீண்டும் செயல்படுத்தி தங்களைக் காப்பாற்றுமாறு ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள் மத்திய அரசை வலியுறுத்தினர்.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் நேற்று முன்தினம் தனது செயல்பாடுகள் முற்றிலுமாக நிறுத்துவதாக அறிவித்தது. இதையடுத்து டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நேற்று திரண்ட ஜெட் ஏர்வேஸ் நிறுவன பணியாளர்கள் நிறுவனத்தைக் காப்பாற்றுமாறு பதாகை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நிறுவனத்தைக் காப்பாற்றுவதன் மூலம் 16 ஆயிரம் ஊழியர்களின் குடும்பங்கள் காப்பாற்றப்படும் என்று அவர்கள் கூறினர். நிறுவனத்தை மீண்டும் செயல்படுத்தும் விஷயத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக தலையிட்டு சுமுக தீர்வு காண வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

போராட்டத்தில் பங்கேற்ற பல ஊழியர்கள் கதறி அழுதனர். தங்களது எதிர்காலம் கேள்விக் குறியாகிவிட்டதே, தங்கள் குடும்பத்தை யார் காப்பாற்றுவது என அவர்கள் கதறினர். 26 ஆண்டுகளாக ஜெட் ஏர்வேஸின் சரக்குகள் கையாளும் பிரிவில் பணி புரிந்துவரும் பூஜா பூஜாரி என்ற பணியாளர் கடந்த இரண்டு மாதமாக ஊதியம் இல்லாமல் பணிபுரிந்ததாகவும், தற்போது அந்த வேலையும் இல்லை என்றாகிவிட்டதே என்று கதறினார். தான் சரியாக தூங்கி பல நாட்களாகி விட்டதாகவும் மனைவி, குழந்தைகளை எப்படிக் காப்பாற்றப் போகிறேன் என்று தெரியவில்லை என அவர் கூறினார். ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் 120 விமானங்களுடன் தினசரி 600 விமான சேவைகளை இயக்கி வந்தது. இதில் உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு சேவைகளும் அடங்கும். தற்போது அனைத்து சேவைகளையும் நிதி நெருக்கடி காரணமாக முடக்கிவிட்டது.

நிர்வாகம் ஒருபோதும் உண்மை நிலவரத்தை ஊழியர்களுக்கு தெரிவித்தது கிடையாது என்று விமான நிறுவன ஊழியர் சங்கத் தலைவர் சைதன்யா மாணிக்கர் கூறினார். நிறுவனம் கடுமையான நெருக்கடியை சந்தித்து வந்த நிலையில் பைலட்டுகளுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால் 400 பைலட்டுகள் வேறு நிறுவனங்களுக்கு மாறிவிட்டனர். இதேபோல 40 பொறியாளர்களும் வேறு நிறுவனங்களுக்கு மாறிவிட்னர். நிறுவனத்தை தொடர்ந்து நடத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஊழியர்களிடம் பேசிய நிறுவன சிஇஓ வினய் துபே கூறினார்.

இதனிடையே நிறுவனத்தை தொடர்ந்து நடத்துவது குறித்து உறுதியான மறு சீரமைப்புத் திட்டத்தை அளிக்குமாறு டிஜிசிஏ அறிவுறுத்தியுள்ளது. நிறுவன செயல்பாடுகள் முடக்கப்பட்ட பிறகு, அது செயல்பட வேண்டுமாயின் தொடர்ந்து மறு சீரமைப்பு குறித்த விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close