[X] Close

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை காப்பாற்றுங்கள்: வங்கிகளுக்கு விஜய் மல்லையா கோரிக்கை


  • kamadenu
  • Posted: 27 Mar, 2019 07:59 am
  • அ+ அ-

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் இயக்குநர் குழுவின் தலைவர் பொறுப்பிலிருந்து நரேஷ் கோயல் விலகிய நிலையில் அந்நிறுவனத்தை காப்பாற்றுமாறு வங்கிகளுக்கு இங்கிலாந்துக்கு தப்பியோடிய தொழிலதிபர் விஜய் மல்லையா கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள ட்விட்டர் பதிவில், ``ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை தொடர்ந்து செயல்படச் செய்வதற்காக அதன் பங்குகளை பொதுத்துறை வங்கிகள் வாங்கியுள்ளதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. இதன்மூலம் பலர் வேலையிழப்பது தடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விமான சேவை மற்றும் நிறுவனம் பாதிக்கப்படாமல் காக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுபோன்ற நடைமுறையையும் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் மீதும்காட்டியிருக்கலாம் என்பதே விருப்பமாகும்’’ என கூறியுள்ளார்.

இது தொடர்பாக நேற்று காலையிலிருந்தே பல ட்விட்டர் பதிவுகளை வெளியிட்டுள்ளார். அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது: ``கர்நாடக உயர் நீதிமன்றத்தின் வசம் என்னிடமிருந்து கைப்பற்றப்பட்ட சொத்துகள் உள்ளன. அவற்றை விற்று வங்கிகள் பணத்தை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அதை ஏன் வங்கிகள் செய்யவில்லை என்று தெரியவில்லை. சொத்துகளை விற்பதன் மூலம் கிடைக்கும் பணத்தைக்கொண்டு ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தைக் காப்பாற்றலாம்’’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

``கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தைக் காப்பாற்ற ரூ. 4 ஆயிரம் கோடிக்கு மேல் தான் முதலீடு செய்ததாக குறிப்பிட்ட அவர், ஊழியர்களின் வேலையைக் காக்க இந்த முதலீடு செய்யப்பட்டது. ஆனால் இதற்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. ஆனால் ச ந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம் என்மீது பழி சுமத்தப்பட்டது. இப்போது உள்ள அதே பொதுத்துறை வங்கிகள்தான் அப்போதும் இருந்தன. மிகச் சிறந்த நிர்வாகத்தில் செயல்பட்ட அற்புதமான ஏர்லைன்ஸ் நிறுவனத்தை கொஞ்சம்கூட இரக்கமில்லாமல் முடங்கிப் போகச் செய்துவிட்டனர். இது மத்திய தேசிய ஜனநாயக கூட்டணியின் (என்டிஏ) இரட்டை நிலைப்பாட்டைக் காட்டுகிறது,’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் குறைந்த கட்டண விமான நிறுவனங்களின் போட்டியால் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதேசமயம் ஸ்திரமற்ற கச்சா எண்ணெய் விலை உயர்வு, டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பில் நிலவிய ஸ்திரமற்ற நிலை ஆகியன இந்நிறுவனத்துக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்படக் காரணமாயிற்று. கடன் சுமை காரணமாக வங்கிகளுக்கு வட்டி கட்டமுடியாத சூழலும், விமானங்களை குத்தகைக்கு அளித்த நிறுவனங்களுக்கு குத்தகை தொகையை செலுத்த முடியாத சூழலும் உருவானது. அனைத்துக்கும் மேலாக ஊழியர்களுக்கும், பைலட்டுகளுக்கும் சம்பளம் வழங்க முடியாத சூழல் ஏற்பட்டது என்றும் விஜய் மல்லையா குறிப்பிட்டுள்ளார்.

வாக்களிக்கலாம் வாங்க

'மிஸ்டர் லோக்கல்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close