[X] Close
 

தவறு நடந்துவிட்டது: மவுனம் கலைத்த ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுக்கர்பர்க்


facebook-made-mistakes-on-cambridge-analytica-says-zuckerberg

  • பாரதி ஆனந்த்
  • Posted: 22 Mar, 2018 09:42 am
  • அ+ அ-

கேம்ப்ரிட்ஜ் அனலிட்டிகா விவகாரத்தில் தவறு நடந்துவிட்டதாக ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுக்கர்பர்க் ஒப்புக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு நிலைத்தகவலை பதிவிட்டுள்ளார். 


"கேம்ப்ரிட்ஜ் அனலிட்டிக்கா விவகாரத்தில் ஒரு முக்கிய முன்னெடுப்பு குறித்த தகவலை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். உங்கள் தகவல்களைப் பாதுகாக்கும் பொறுப்பு எங்களிடம் இருக்கிறது. அதை செய்யமுடியாவிட்டால் நாங்கள் உங்களுக்கு சேவை செய்ய முடியாது. தகவல் திருட்டு எப்படி நடந்தது என்பதை புரிந்துகொள்ள முயற்சித்துவரும் வேளையில் இனி இப்படி ஒன்று நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆராய்ந்து வருகிறேன். ஆனால், இது போன்ற தகவல் திருட்டுகளைத் தடுக்கும் நடவடிக்கைகளை நாங்கள் பல ஆண்டுகளுக்கு முன்னரே எடுத்துவிட்டோம் என்பது ஒரு நற்செய்தி. அதேவேளையில், நாங்கள் சில தவறுகளையும் செய்துவிட்டோம். அதை திருத்திக் கொள்ள வேண்டும்.
நான்தான் ஃபேஸ்புக்கைத் தொடங்கினேன். அந்த தளத்தில் ஏற்படும் சிக்கல்களுக்கு நானே பொறுப்பாவேன். இந்த கசப்பான அனுபவத்தின் மூலம் பாடம் கற்றுக் கொள்வோம்..
இனிவரும் காலங்களில் இது போல தகவல் திருட்டை பேஸ்புக் சகித்துக்கொள்ளாது. கேம்பிரிட்ஜ் அனலடிகா நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட செயலிகளை பேஸ்புக் நிறுவனம் தணிக்கை செய்யும்"
என்று தெரிவித்துள்ளார்.


ஃபேஸ்புக்கிலிருந்து 5 கோடி பயனாளர்களின் தகவல்களை லண்டனை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் கேம்ப்ரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனம் திருடியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அமெரிக்க அதிபர் தேர்தல் வேளையில், ட்ரம்பின் வெற்றிக்கு ரஷ்யாவின் தொடர்பு உதவியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அரசியல் தகவல் ஆய்வு மற்றும் மக்களின் உளவியல் ஆலோசனை நிறுவனமான கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா, ஃபேஸ்புக் பயனாளிகள் ஐந்து கோடி பேரின் தகவல்களை முறைகேடாகப் பயன்படுத்தியதாக புகார் எழுந்தது.
வாட்ஸ் அப்பின் துணை நிறுவனரான பிரைன் அக்டன் தனது ட்விட்டர் பக்கத்தில், 'ஃபேஸ்புக்கை நீக்க வேண்டிய நேரம் இது' ( #deletefacebook) என்று தனது பின்தொடர்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்ததைத் தொடர்ந்து  இந்த விவகாரம் விஸ்வரூபமெடுத்துள்ளது.


இந்நிலையில் இவ்விவகாரம் வெளிச்சத்துக்கு வந்த 4 நாட்களாக அமைதியாக இருந்த மார்க் ஸுக்கர்பர்க் தற்போது தனது மவுனத்தை கலைத்து 'தவறு நடந்துவிட்டது' என ஒப்புக்கொண்டுள்ளார்.



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close