[X] Close

ஹார்லி டேவிட்சன் பைக்குகளுக்கு வரியா? - இந்தியாவை மீண்டும் திட்டித்தீர்த்த ட்ரம்ப்


harley-davidson-to-bikes-trumped-up-again-in-india

  • Team
  • Posted: 27 Feb, 2018 12:06 pm
  • அ+ அ-

அமெரிக்காவின் ஹார்லி டேவிட்சன் பைக்குகளுக்கு பிரதமர் மோடி உறுதியளித்தபடி வரியைக் குறைக்கவில்லை, இந்தியாவிடம் பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டும் இதுவரை வரி குறைக்கப்பட வில்லை என அதிபர் டரம்ப் மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த மோட்டார் சைக்கிள் தயாரிக்கும் நிறுவனமான ஹார்லி டேவிட்சனின் மோட்டார் சைக்கிள்கள் பைக் பிரியர்களின் கனவு வாகனமாக உள்ளது. நூற்றாண்டுக்கும் மேலாக சூப்பர் பைக்குகளை தயாரித்து வரும் ஹார்லி டேவிட்சன், எச்-டி என அழைக்கப்படுகிறது.

அமெரிக்காவில் இருந்து இந்தியாவில் இறக்குமதியாகும் ஹார்லி டேவிட்சன் பைக்குகளுக்கு 60 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை வரி விதிக்கப்பட்டு வந்தது. 800 சிசி வரை கொண்ட பைக்குகளுக்கு 60 சதவீதமும், 800 சிசிக்கும் மேற்பட்ட பைக்குகளுக்கு 75 சதவீத வரியும் விதிக்கப்பட்டு வந்தது.

இதனை வெகுவாக குறைக்க வேண்டும் என இந்தியாவிடம் அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. சமீபத்தில் இதற்கான வரி 50 சதவீதமாக குறைக்கப்பட்டது. ஆனால் முற்றிலுமாக வரியை நீக்க வேண்டும் என அமெரிக்கா கோரி வருகிறது.

இதுபற்றி அதிபர் ட்ரம்ப் சமீபத்தில் கூறுகையில், ''அமெரிக்காவின் முன்னணி நிறுவனத்தின் பைக், இந்தியாவில் விற்பனை செய்யப்பட 50 சதவீத வரி செலுத்த வேண்டும். ஆனால், இந்தியாவின் அடையாளம் இல்லாத நிறுவனங்களின் பைக்கிற்கு கூட அமெரிக்காவில் வரி கிடையாது. இந்த நிலை தொடர்ந்தால் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பைக்குகளுக்கு இனிமேல் அமெரிக்காவில் கூடுதலாக வரி விதிக்கப்படும்'' என எச்சரித்தார்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ட்ரம்ப் மீண்டும் பேசியுள்ளார். அந்நாட்டின் மாகாண ஆளுநர்களிடையே அவர் பேசியதாவது:

''ஹார்லி டேவிட்சன் பைக் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி என்னிடம் சமீபத்தில் தொலைபேசியில் பேசினார். 50 சதவீதமாக வரி குறைக்கப்பட்டுள்ளதாக கூறினார். சரி, அதனால் எங்களுக்கு என்ன பயன்? எங்களுக்கு எதுவும் கிடைக்கப்போவதில்லை. நமக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், வரியை குறைத்து விட்டதாகவும் அவர்கள் எண்ணுகின்றனர்.

ஆனால், நமக்கு பயனளிக்கும் விதமாக அவர்கள் எதையும் செய்யவில்லை. நமக்கு மகிழ்ச்சி அளிக்கும் காரியத்தை செய்து போல பிரதமர் மோடி பேசினார். இந்த வரிகுறைப்பால் நான் ஆச்சரியப்படுவேன் என்றும் எண்ணினார். ஆனால் இந்த வரி குறைப்பு போதுமானது அல்ல. நமது நிறுவனங்களுக்கு இழைக்கப்படும் அநீதி தொடர்கிறது.

இது சரியானதல்ல, பல ஒப்பந்தங்கள் இப்படிதான் உள்ளன. இதில் மாற்றம் செய்யப்பட வேண்டும். இந்தியாவின் அடையாளம் இல்லாத நிறுவனங்களின் பைக்கிற்கு கூட எந்த ஒரு வரியும் விதிக்கப்படவில்லை. இதுதான் வர்த்தக தாராளமயமாக்கலா? வர்த்தகத்தில் ஒரு தரப்பை ஏமாற்றி மற்ற தரப்பு பயனடைவதை ஏற்க முடியாது. இந்தியா மேலும் வரியை குறைப்பது குறித்து பரிசீலிக்கும் என நம்புகிறேன்'' எனக் கூறினார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close