[X] Close
 

இலங்கையில் முகநூலுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்: மதக் கலவரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது


srilanka-riot-srilankan-clash-facebook-ban

கோப்புப் படம்: ஏ.எஃப்.பி

  • kamadenu
  • Posted: 17 Mar, 2018 11:28 am
  • அ+ அ-

இலங்கையில் மதக் கலவரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதையடுத்து சமூக வலைதளமான முகநூலுக்கு(பேஸ்புக்) விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா உத்தரவிட்டார்.

இலங்கையின் அம்பாறை நகரில் முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான உணவகத்தில் கொத்து புரோட்டாவில் ஆண்மை இழக்கச் செய்யும் மருந்து கலக்கப்பட்டிருப்பதாகக் கூறி, சிங்கள இளைஞர்கள் அந்த உணவகத்தை கடந்த பிப். 26 அன்று அடித்து நொறுக்கினர். இது தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பப்பட்டது. 

அதையடுத்து, கண்டி மாவட்டத்தில் கடந்த மார்ச் 4-ம் தேதி முஸ்லிம்களுக்கு எதிராக கலவரம் வெடித்தது.

இந்த கலவரத்தில் 445 வீடுகளும், கடைகளும், 24 பள்ளிவாசல்களும், 65 வாகனங்களும் சேதமடைந்தன. முஸ்லிம் ஒருவரும், பவுத்த மதத்தை சேர்ந்த ஒருவரும் உயிரிழந்தனர். 

28 பேர் காயமடைந்தனர். கலவரம் தொடர்பாக பெளத்த அடிப்படைவாத இயக்கமான ‘மகசான் பாலாகயா’வின் தலைவர் அமித் ஜீவன் உள்பட 280 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மதக் கலவரங்கள் பரவாமல் தடுக்க மார்ச் 6-ம் தேதி இலங்கையில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு, மார்ச் 7-ல் பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

மார்ச் 10-ம் தேதி கலவரம் நடைபெற்ற கண்டிக்கு சென்ற பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்துக்கும் முதற்கட்டமாக ரூ.50 ஆயிரம் வழங்க உத்தரவிட்டார்.

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா, கலவரம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற 3 நீதிபதிகளை கொண்ட குழுவை நியமித்தார். 

இந்நிலையில், கொழும்பில் இலங்கை அதிபரின் செயலாளர் அஸ்டின் பெர்னாண்டோவுக்கும் பேஸ்புக் பிரதிநிதிகளுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து, இலங்கையில் பேஸ்புக்கிற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா உத்தரவிட்டார்.

-எஸ். முஹம்மது ராஃபி




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close