[X] Close

உலகின் முன்னணி பிராண்ட்களின் குடிநீர் பாட்டில்களில் பிளாஸ்டிக் துகள்கள்: அமெரிக்க ஆய்வில் பகீர் தகவல்


drinking-water-plastic-plastic-ingredients-in-water-orb-media-research

  • முத்துக்குமார்
  • Posted: 15 Mar, 2018 18:34 pm
  • அ+ அ-

நீர் தொடர்பான நோய்களுக்கு தினசரி உலகில் 4,000 குழந்தைகள் பலியாவதாக ஐ.நா ஆய்வறிக்கை தெரிவிக்க, பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீரில் பிளாஸ்டிக் துகள்கள் கலந்திருப்பதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று லாபநோக்கமற்ற பத்திரிகை நிறுவனமான Orb Media  நடத்திய பாதை திறப்பு ஆய்வில் பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆய்வுக்காக 11 குடிநீர் பிராண்ட்களின் மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன, 5 கண்டங்களில் உள்ள 9 நாடுகளின் 19 இடங்களிலிருந்து இந்த பிளாஸ்டிக் குடிநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனைக்குட்படுத்தப்பட்டதில் 93% மாதிரிகளில் பிளாஸ்டிக் நுண் துகள்கள் இருக்கும் அதிர்ச்சித் தகவல் கிடைத்தது. 

சில பாட்டில்களில் பிளாஸ்டிக் துகள் சுத்தமாக இல்லை. சில மாதிரிகளில் லிட்டர் ஒன்றுக்கு 10,000 பிளாஸ்டிக் நுண் துகள்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.

பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்டு விற்கப்படும் குடிநீருக்கான சந்தை ஆண்டு ஒன்றிற்கு 147 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கான மிகப்பெரிய சந்தையாகும். இதில் கடும் போட்டாப்போட்டி நிலவி வருவதும் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில்தான் லாபநோக்கற்ற ஆர்ப் மீடியா என்ற வாஷிங்டன் நகரில் உள்ள ஊடக நிறுவனம் ஒரு பிளாஸ்டிக் பாட்டில் குடிநீரில் ஆயிரக்கணக்கான பிளாஸ்டிக் நுண் துகள் இருக்கலாம் என்ற பகீர் தகவலை ஆய்வின் மூலம் கண்டுபிடித்துள்ளது.

11 பிராண்டுகளின் 250 பாட்டில்கள் இதற்கான சோதனையில் எடுத்துக் கொள்ளப்பட்டன. பிளாஸ்டிக் நுண் துகள்கள் என்றால் பாலிப்ரொபிலீன், நைலான், பாலி எத்திலீன் டெரெப்தலேட் ஆகிய துகள்கள் சகஜமாக குடிநீரில் காணக்கிடைக்கிறது. 

இதனையடுத்து முன்னணி பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில் நிறுவனம் ஒன்றை செய்தியாளர்கள் தொடர்பு கொண்ட போது, பிளாஸ்டிக் துகள் இருப்பதை ஒப்புக் கொண்டது, ஆனால் ஆர்ப் மீடியா அளவுகளை ஊதிப்பெருக்குகிறது என்று தெரிவித்துள்ளது. இந்தத் தகவல்களுக்கு வினையாற்றிய ஐநா சுற்றுச்சூழல் திட்டத்தின் செயல் இயக்குநர் எரிக் சோல்ஹெய்ம், “தங்கள் குடிநீர் பாட்டிலில் பிளாஸ்டிக் துகள்களை விரும்பும் ஒருவரையாவது இந்த பூமியில் எனக்குக் காட்டுங்கள்” என்று கூறியுள்ளர்.

பேக்கேஜ் குடிநீரை நம்பி உலகம் முழுதும் 2.1 பில்லியன் மக்கள் தொகையினர் வாழ்கின்றனர். பாதுகாப்பற்ற குடிநீர் பாட்டில்களினால், குடிநீர் தொடர்பான நோய்களுக்கு சுமார் 4,000 குழந்தைகள் தினசரி பலியாவதாக ஐநா கவலை வெளியிட்டுள்ளது. 

கடந்த ஆண்டு ஆர்ப் மீடியா குழாய்த் தண்ணீரிலும் கூட பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாக தகவல் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. பாட்டில் குடிநீர் நுகர்வோரில் சிலருக்கு இந்த ஆய்வு அதிர்ச்சியளித்தாலும் பலருக்கு இதனால் ஒன்றும் தீமையில்லை என்ற எண்ணமே உள்ளதாகத் தெரிகிறது. 

மக்கள் தாங்கள் என்ன சாப்பிடுகிறோம், எதைக் குடிக்கிறோம் என்பது பற்றிய விழிப்புணர்வுக்குத் தகுதியானவர்களே ஆகவே இத்தகைய ஆய்வுகள் வரவேற்கத்தக்கவையே என்று ஆர்ப் மீடியா ஆய்வுக்கு வரவேற்பு பெருமளவில் கிடைத்துள்ளது.

கிறிஸ்டோஃபர் டைரி | தமிழில் ஆர்.முத்துகுமார்

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close