[X] Close
 

சீனாவில் உள்ள கட்டுப்பாட்டை நீக்க சட்டத் திருத்தம்: அதிபர் பதவியில் நீடிக்க ஜி ஜின்பிங் முடிவு- அரசியல் நிபுணர்கள் எச்சரிக்கை


lawmakers-to-remove-control-in-china-ji-jinping-s-decision-to-extend-the-post-of-president-political-experts-warn

  • Team
  • Posted: 27 Feb, 2018 05:44 am
  • அ+ அ-

சீனாவில் ஒருவர் 2 முறை மட்டுமே அதிபர் பதவி வகிக்கலாம் என்ற கட்டுப்பாட்டை நீக்க அதிபர் ஜி ஜின்பிங் முடிவெடுத்துள்ளார். இதனால் பல பிரச்சினைகள் எதிர்காலத்தில் ஏற்படலாம் என்று அரசியல் நிபுணர்கள் எச்சரித்துள் ளனர்.

சீனாவில் அதிபர், துணை அதிபர் பதவிகளில் ஒருவர் 2 முறை மட்டுமே இருக்க வேண்டும். இரண்டு முறைக்கு மேல் அதிபராக முடியாது என்று சீன அரசியல் சட்டத்தில் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்டுப்பாட்டை நீக்க ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி முடிவெடுத்துள்ளது. தற்போதுள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங் (64) கடந்த 2013-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரே ஆளும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவராகவும் அதிபராகவும் பதவி வகிக்கிறார். செல்வாக்குமிக்கவர் என்று அவரை ஆளும் கட்சினரே அறிவித்தனர்.

இந்நிலையில், ஜி ஜின்பிங்கின் பதவி காலம் (2-வது முறை) வரும் 2023-ம் ஆண்டு முடிவடைகிறது. அதன்பின் அவர் அதிபர் பதவி வகிக்க முடியாது. இந் நிலையில் மன்னராட்சியில் உள்ளது போல், கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாமல் காலவரையின்றித் தானே அதிபர் பதவி வகிக்க ஜி ஜின்பிங் முடிவெடுத்துள்ளார். அதற்கேற்ப அரசியல் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வர, ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவும் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.

ஆனால், அதிபராக ஒருவர் தொடர்ந்து நீடிக்கும் நிலை ஏற்பட்டால், நாட்டில் திடீர் பிரச்சினைகள் ஏற்பட்டாலோ, பொருளாதார சரிவு ஏற்பட்டாலோ, வெளிநாட்டு கொள்கைகளில் சிக்கல் எழுந்தாலோ நிலைமை மோசமாகிவிடும் என்று அரசியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். எதிர்காலத்தில் நாட்டின் ஸ்திரத்தன்மை கேள்விக்குறியாகி விடும் என்கின்றனர்.

மாசே துங் மறைவுக்கு பிறகு சீனாவில் ஒருவர் ஆட்சி முடிவுக்கு வந்தது. அதன்பின் ஆட்சி அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கும் முறை வந்தது. அதன் விளைவாக ஜியாங் ஜெமின் அதிபரானார். அவருக்குப் பிறகு ஹூ ஜின்டாவோ அதிபரானார். அதன்பின் ஜி ஜின்பிங் அதிபரானார். ஜி ஜின்பிங்குக்கு முன்பு அதிபராக இருந்தவர்கள் 2 முறை மட்டுமே பதவி வகித்தவர்கள். ஆட்சி அதிகாரத்தை அடுத்தவருக்கு சட்டப்படி விட்டுக் கொடுத்தவர்கள்.

ஆனால், ஜி ஜின்பிங் தொடர்ந்து அதிபராக பதவி வகிக்கும் எண்ணத்துடன் அரசியல் சட்டத் திருத்தங்கள் கொண்டு வர முடிவெடுத்துள்ளார். எனவே, 2023-ம் ஆண்டுக்குப் பிறகும் ஜி ஜின்பிங்கே தொடர்ந்து அதிபராக இருக்கும் நிலை உருவாகி உள்ளது.

இந்நிலையில், ஜி ஜின்பிங்கின் முடிவால் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளும் பிரச்சினைகள் ஏற்படலாம். ஏனெனில், 2 முறைக்கு மேல் அதிபர் பதவி வகிக்க கூடாது என்ற கட்டுப்பாடு, மற்றவர்களுக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது.

அதற்கு வாய்ப்பில்லாத போது, கட்சிக்குள் பிளவு ஏற்படும் என்கின்றனர். அதைவிட தென் சீன கடல் பகுதி யில் சீனா ராணுவத்தை குவித்துள்ளது. இதற்கு ஏற்கெனவே பல நாடுகள் எதிர்ப்பு வருகின்றன. இந்நிலையில் ஜி ஜின்பிங் தொடர்ந்து அதிபராக பதவியில் நீடிக்கும் நிலை வந்தால், முதலில் வெளிநாடுகளில் இருந்துதான் எதிர்ப்பு வரும் என்றும் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close