[X] Close
 

வரலாற்றில் முதன்முறை: வடகொரிய அதிபரை சந்திக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சம்மதம்


donald-trump-and-n-korea-s-kim-jong-un-agree-to-meet

  • Team
  • Posted: 09 Mar, 2018 10:03 am
  • அ+ அ-

எதிரும்புதிருமான நாடுகள், இருதுருவங்கள் இப்படித்தான் அறியப்பட்டிருக்கின்றன வடகொரியாவும் அமெரிக்காவும். சமீபகாலமாக இருநாடுகளுக்கும் இடையேயான புகைச்சல் முற்றியது. இந்நிலையில், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னை சந்திக்க அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சம்மதம் தெரிவித்திருக்கிறார். இவர்களுக்கு இடையேயான சந்திப்பு மே மாதம் நடைபெறும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தென்கொரிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சங் யூயி யோங், "வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை சந்திக்க ஆர்வம் தெரிவித்து இருந்த நிலையில், கிம்மின் கோரிக்கைக்கு டொனால்டு ட்ரம்ப் ஒப்புதல் தெரிவித்து இருக்கிறார்" என்றார். கடந்த திங்கள்கிழமை பியாங்யாங்கில் கிம் ஜாங்-உன் உடன் பேச்சுவார்த்தை நடத்திய தென்கொரிய குழுவில் அவரும் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளையில், அமெரிக்க உயரதிகாரி ஒருவர் கூறும்போது, "நிரந்தர அணு ஆயுத நீக்கத்துக்கு வடகொரியா இசைவு தெரிவிப்பதைத் தவிர வேறு எந்த ஒரு முடிவுக்கும் அமெரிக்கா ஒப்புக்கொள்ளாது" எனத் தெரிவித்தார்.
ட்ரம்ப் ட்வீட்:
இது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், "அணு ஆயுத நீக்கம் பற்றி தென்கொரியப் பிரதிநிதிகளுடன் கிம் பேசியுள்ளார். அது வெறும் தற்காலிக நிறுத்திவைப்பு மட்டுமல்ல. இந்த காலகட்டத்தில் வடகொரியா ஏவுகணைச் சோதனைகளைக்கூட நடத்தாது. நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் நல்லதொரு ஒப்பந்தம் எட்டப்படும் வரை வடகொரியா மீது அமெரிக்கா விதித்துள்ள தடைகள் நீடிக்கும். சந்திப்பு திட்டமிடப்படுகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close