[X] Close

உங்கள் விருப்பத்தை மீறி உங்கள் நகர்வை கண்காணிக்கும் கூகுள்


like-it-or-not-google-tracks-your-movements

  • கார்த்திக் கிருஷ்ணா
  • Posted: 14 Aug, 2018 11:38 am
  • அ+ அ-

உங்களை பின் தொடரவேண்டாம், கண்காணிக்க வேண்டாம் என்று வெளிப்படையாக சொல்லி, தேர்வு செய்தாலும் கூகுள் உங்கள் நகர்வை கண்காணிக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா?

தனியார் செய்தி நிறுவனமான ஏபி (அசோசியேடட் ப்ரெஸ்) இது குறித்த புலனாய்வை செய்துள்ளது.

ஆண்ட்ராய்ட் கருவிகள் மற்றும் ஐஃபோன்களில் இருக்கும் கூகுள் சேவைகள் பல, உங்கள் இருப்பிடம் பற்றிய தரவை சேகரித்து வைக்கிறது. ப்ரைவசி செட்டிங் எனப்படும் தனியுரிமை அமைப்புகளில் இதை முடக்கியிருந்தாலும் கூட இந்த தகவல் சேகரிப்பு நடக்கிறது. 

அமெரிக்காவின் ப்ரின்ஸ்டன் பல்கலையில் இருக்கும் கணினி அறிவியல் ஆய்வாளர்கள், ஏபியின் இந்த கண்டுபிடிப்பை உறுதி செய்துள்ளனர். 

பெரும்பாலும், உங்கள் இருப்பிடம் குறித்த தகவலை பயன்படுத்த கூகுள் உங்கள் அனுமதியைக் கேட்கும். கூகுள் மேப்ஸ் போன்ற செயலிகள், வழிகாட்ட, நீங்கள் இருக்கும் இடத்தைப் பற்றிய புவியியல் சார் தகவலைப் பெற அனுமதிக்குமாறு உங்களை நினைவூட்டும். 

உங்கள் இருப்பிடம் குறித்த தகவலை பதிவு செய்ய நீங்கள் அனுமதித்தால், கூகுள் மேப்ஸ், டைம்லைனில் உங்கள் தினசரி நகர்வைப் பற்றிய தரவுகளைக் காட்டும். 

ஒருவரது நகர்வைப் பற்றி நிமிடத்துக்கு நிமிடம் தகவல் சேகரிப்பது தனியுரிமைக்கு ஆபத்தாகும். இது சில நேரங்களில் போலீஸாரால் சந்தேகிக்கப்படும் நபர்களின் இருப்பிடத்தைத் தெரிந்து கொள்ள பயன்படுத்தப்படுகிறது. 

நீங்கள் இருந்த இடத்தைப் பற்றிய தரவை சேகரிக்காமல் பார்த்துக்கொள்வதாக கூகுள் தெரிவிக்கிறது. கூகுளின் உதவி பக்கத்தில், "இருப்பிடம் பற்றிய தகவல் பகிர்வை எப்போது வேண்டுமானாலும் அணைத்து வைக்கலாம். இப்படி அணைத்து வைக்கும் போது நீங்கள் எங்கு செல்கிறீர்கள் என்பது பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட மாட்டாது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் இது உண்மையல்ல. பகிர்வை அணைத்து வைத்தாலும், சில கூகுள் செயலிகள், தானாகவே உங்கள் இருப்பிடம் பற்றியத் தகவல்களை, உங்களைக் கேட்காமல் சேகரித்து வைக்கின்றன. 

உதாரணத்துக்கு, கூகுளின் மேப்ஸ் செயலியை நீங்கள் திறந்தாலே போதும், உங்கள் திரையின் ஸ்க்ரீன்ஷாட் ஒன்றை கூகுள் சேர்த்து வைக்கும். ஆண்ட்ராய்ட் போன்களில் இருக்கும் தினசரி வானிலை நிலவரத்தைச் சொல்லும் அம்சம், ஏறக்குறைய நீங்கள் இருக்கும் இடத்தைச் சுட்டிக் காட்டி விடும்.

சாக்லேட் எங்கு கிடைக்கும், குழந்தைகளின் அறிவியல் உபகரணங்கள் எங்கு கிடைக்கும் என்று இருப்பிடத்துக்கு சம்பந்தமில்லாத ஏதாவது ஒன்றை நீங்கள் கூகுளில் தேடினாலும், நீங்கள் இருக்கும் இடத்தின் அட்சரேகை மற்றும் தீர்க்கரேகை பற்றிய துல்லியமான தகவல்  உங்கள் கூகுள் கணக்கில் சேகரித்து வைக்கப்படும். இந்த விவரம் ஒரு சதுர அடி வரை துல்லியமானதாகும். 

இந்தத் தனியுரிமை தகவல் சேகரிப்புப் பிரச்சினை, கூகுள் ஆண்ட்ராய்ட் இருக்கும் கருவிகளைப் பயன்படுத்தும், கிட்டத்தட்ட 2 பில்லியன் பயனர்களையும், மேலும் ஐஃபோன்களில் கூகுள் தேடியந்திரம் மற்றும் மேப்ஸ் செயலியைப் பயன்படுத்தும் பல மில்லியன் மக்களையும் பாதிக்கிறது.

- ஏபி

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close