[X] Close

செவ்வாய் கிரகத்திலாவது இடம் கொடுங்கள்!- ஓர் அகதியின் பகடி


life-in-the-terminal

  • பாரதி ஆனந்த்
  • Posted: 09 Aug, 2018 15:06 pm
  • அ+ அ-

ஹசன் அல் கொண்டார், இப்போதைக்கு இவர் நாடற்றவர் வீடற்றவர் ஆனால் நகைச்சுவைக்கு மட்டும் இவரிடம் சிறிதும் வறட்சியில்லை. சிரிய அகதியான இவர் அண்மையில் விசா கோரி கனடா நாட்டுக்கும் மார்ஸ் கிரகத்துக்கும் (செவ்வாய் கோளுக்கும்) விண்ணப்பம் அனுப்பியுள்ளார்.

மலேசிய தலைநகர் கொலாலம்பூரில் உள்ள விமான நிலையத்துக்குச் சென்றால் நீங்கள் ஹசனைப் பார்க்க முடியும். கடந்த 150 நாட்களாக ஹசன் கொலாலம்பூர் விமான நிலையத்தில்தான் வசித்து வருகிறார்.

சிரிய அகதியான ஹசனுக்கு தற்போது வயது 37. அவருக்குத் துணையாக இருப்பதெல்லாம் மிஸ் க்ரிம்ஸன் என அவர் பெயர் சூட்டியுள் சிவப்பு நிற பஞ்சடைக்கப்பட்ட பொம்மை நாய்.

எப்படி நிகழ்ந்தது அந்த சந்திப்பு?
நான் பிலிப்பைன்ஸ் சென்றுவிட்டு சென்னைகு திரும்பிக்கொண்டிருந்தேன். அப்போது கொலாலம்பூர் விமான நிலையத்தின் இரண்டாவது முனையம் வழியாக நான் வெளியேறிக் கொண்டிருந்தேன். அப்போதுதான் அந்த தாடிவைத்த மனிதரைப் பார்த்தேன். அவர்தான் ஹசன் கொண்டார் என்பதை என்னால் உடனே அடையாளம் காண முடிந்தது. காரணம், அவரது ஃபேஸ்புக் பக்கத்தை நான் பின் தொடர்கிறேன்.

அவரை அணுகி சிறிது நேரம் அவருடன் நான் உரையாட முடியுமா என்றேன். பகடியுடனேயே பேச்சைத் தொடங்கினார். "எனக்கு எந்த அவரசமும் இல்லை. உலகில் உள்ள நேரம் அத்தனையும் என்வசமே இருக்கிறது" என்றார்.
அருகிலிருந்த சேர்களில் இருவரும் அமர்ந்தோம். சிறிய உரையாடல் என்றுதான் கேட்டிருந்தேன். ஆனால், அது மிக நீண்ட உரையாடலாக அமைந்தது. "இந்த முணையம்தான் என் வாழ்க்கை" என்றார். அதை நகைத்துக் கொண்டே சொன்னாலும் அதில் சோகம் இருந்தது.

எப்படி வந்தார்..
கொண்டார் 2011 சிரிய போரில் இருந்து தப்பித்து ஐக்கிய அரபு எமீரகத்துக்குச் சென்றார். அங்கு பணியும் கிடைத்தது. ஆனால், அவரது ஒர்க் விசா முடிந்தது. அதனால் அவரை அவரது சொந்த ஊருக்கு நாடுகடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதற்கு ஹசன் ஒப்புக்கொள்ளவில்லை. சிரியா சென்றால் தன்னை கைது செய்து கொன்றுவிடுவார்கள் என்று மன்றாடினார். சிரியாவில் ராணுவ சேவையில் ஈடுபடுவது கட்டாயம். ஆனால், ஹசனோ அந்த கட்டாயத்திலிருந்து தப்பியே யுஏஇ ஓடினார். இதன் காரணமாகவே அவர் சிரியா செல்ல அஞ்சுகிறார்.

அவரது மன்றாட்டுக்கு செவி சாய்த்த யுஏஇ அரசி குறைந்தபட்ச சலுகையாக அவரை மலேசியாவுக்கு நாடு கடத்தியது. மலேசிய அரசு சிரிய அகதிகளுக்கு விசா வழங்கிக் கொண்டிருந்ததால் அப்படிச் செய்தது. ஆனால், அங்கும் மூன்று மாதங்கள்தான் தங்க முடியும். மூன்று மாதங்கள் முடிந்த பிறகு கம்போடியா சென்றார். ஆனால், கம்போடியா அரசு ஹசனை ஏற்றுக்கொள்ளவில்லை. அங்கிருந்து ஈகுவேடார் செல்ல கையிலிருந்த அத்தனை பணத்தையும் செலவழித்தார். உலகிலேயே சிரிய நாட்டவர்களுக்கு விசா வழங்கும் மூன்றே நாடுகளில் ஈகுவேடாரும் ஒன்று. ஆனால், அந்த விமானம் அவரை ஏற்றிக்கொள்ளவில்லை. இதனால் தற்போது மலேசியாவிலேயே அவர் முடங்கிக் கிடக்கிறார். அவரை ஏற்றுக்கொள்ள எந்த ஒரு தேசமும் தயாராக இல்லை. 

நம்பிக்கை குறையவில்லை!
இத்தனை துன்பத்தில் இருந்தாலும்கூட ஹசன் சற்றும் நம்பிக்கையை இழக்கவில்லை. தனது பொம்மை நாய், ஃபேஸ்புக் என தன்னை தனிமையிலிருந்து விடுவித்துக் கொள்கிறார். ஒரு விமான நிலையத்தில் 150 நாட்களுக்கும் மேலாக கடத்துவது என்பது மிகந்த மனஅழுத்தத்தைத் தரக்கூடியது. வேலை இல்லை, பணம் இல்லை, செல்வதற்கு வேறு இடமும் இல்லை. 

சிரியாவில் உள்ள அல் ஸ்வீடா கிராமத்தில் அண்மையில்தான் ஐஎஸ்ஐஎஸ் தாக்குதலில் 200 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் ஹசனின் நண்பர்கள் உறவினர்களும் அடங்குவர். இந்தத் தாக்குதலால் ஹசன் சகோதரரின் திருமணம் தள்ளிப்போயுள்ளது. இழப்புகளையும் துயரங்களையும் தாங்கப் பழகிக் கொண்டதாக ஹசன் கூறினார்.

என்னதான் முடிவு..
அவருடன் பேசியபோது, இந்த நிலைமைக்கு என்னதான் முடிவு என்று கேட்டேன். தோள்களை குலுக்கியவாறே தெரியவில்லை என்றார். இப்போதைக்கு அவரது ஒரே நம்பிக்கையாக இருப்பது கனடா அரசு. ஆனால், அந்த கோரிகையும்கூட இரண்டு மாதங்களாக கிடப்பில்தான் கிடக்கிறது.

உதவிக்கரம் நீட்டும் ஊழியர்கள்..
ஏர் ஏசியா விமான நிறுவனம்தான் ஹசனுக்கு உணவு வழங்குகிறது. ஒரு கப் காஃபிக்குக்கூட விமான நிலைய ஊழியர்கள்தான் உதவுகின்றனர். விமான நிலையத்தின் சில ஊழியர்கள் காட்டும் அன்பும் அக்கறையும் தனனை நெகிழச் செய்வதாகக் கூறுகிறார் ஹசன். முகம் தெரியாதவர்களின் உதவிகளால் அவர் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
எஸ்கலேட்டரின் கீழ்தான் இரவு உறக்கம். பயணி ஒருவர் தந்த மடக்கு படுக்கையை வைத்திருக்கிறார். குளிப்பதற்கு இடமில்லை. டவல் பாத் எடுத்துக் கொள்கிறார். துணி துவைக்க முடியாதாம். சில நல் உள்ளம் கொண்ட விமான நிலைய ஊழியர்கள் அவருக்கு துணியை துவைத்துக் கொண்டுவந்து தருகின்றனர்.

இந்த உலகத்தைப் பார்க்க அவருக்கு இருக்கும் ஒரே ஜன்னல் பொபைல் ஃபோன் தான். அதனாலேயே அவருக்கு கிகி சேலஞ்ச் சாத்தியமானது. காருக்கு பதில் ஏர்போர்ட் ட்ராலிகளைக் கொண்டு அவர் கிகி சேலஞ்ச் செய்தார். 

அதைவிட சுவாரஸ்யமானது, "என்னை இந்த பூலோகத்தில் உள்ள எந்த ஒரு நாடும் ஏற்றுக் கொள்ளாததால் நாசாவுக்கு ஒரு விண்ணப்பம் அனுப்பியிருக்கிறேன். செவ்வாய் கிரகத்தில் இடமளிக்குமாறு கோரியிருக்கிறேன்" என்று அவர் கூறியதுதான்
அவர் இப்படி சொல்லிக் கொண்டிருக்கும்போதே எனக்கு அடுத்த விமானத்தைப் பிடிக்க நேரமானதால் புறப்பட்டுவிட்டேன். அவரிடம் கொஞ்சம் பணம் தரலாம் என்று எனது பர்ஸைத் திறந்தேன். ஆனால், அவர் சுயமரியாதையுடன் அதை மறுத்துவிட்டார். 

அவருக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று தோன்றியது. உங்களுக்கு நான் எந்த விதத்தில் உதவி செய்ய முடியும் என்றேன். எனது கதையை பிரபலப்படுத்துங்கள் என்றார்.

-கிருபா சங்கர்

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close