[X] Close
 

ஒரு நாயின் தலைக்கு 7000 டாலர் விலை!- ஏன் தெரியுமா?


7-000-bounty-was-placed-on-this-6-year-old-dog-find-out-why

  • பாரதி ஆனந்த்
  • Posted: 03 Aug, 2018 13:42 pm
  • அ+ அ-

தேடப்படும் குற்றவாளியின் தலைக்கு விலை வைத்து பார்த்திருக்கிறோம். ஏன், சில நேரங்களில் பிரபலங்களின் தலைக்கு விலை வைத்து சர்ச்சையில் சிக்கும் வாய் சவடால்காரர்களையும் பார்த்திருப்போம்.

பத்மாவத் பட ரிலீஸ் வேளையில் தீபிகா தலைக்கு கர்ணி சேனா அமைப்பு விலை வைத்ததே அதுபோல. ஆனால், ஒரு நாயின் தலைக்கு 7000 டாலர் விலை வைத்த சம்பவம் விந்தையாக இருக்கிறது.

சோம்பரா என்ற அந்த 6 வயது நாய்க்கு போதைப் பொருள் கடத்தல் கும்பல் தான் இப்படி விலை வைத்திருக்கிறது. கொலம்பியா நாட்டுத் தலைநகர் பொகோடாவில் போதைப் பொருள் தடுப்பு பிரிவில் மோப்ப நாயாக இருக்கிறது சோம்பரா. இது ஜெர்மன் செப்பர்டு இனத்தைச் சேர்ந்தது. 2016-ல் சோம்பரா 2.9 டன் கொக்கைன் எனப்படும் போதைப் பொருளைக் கண்டுபிடித்தது. பெல்ஜியம் கொண்டு செல்வதற்காக உராபா துறைமுகத்தில் கப்பலில் ஏற்றப்பட்டு இருந்த போதைப் பொருளை தனது மோப்பத் திறனால் கண்டுபிடித்தது. 

அந்த போதைப் பொருள் கொலம்பியாவின் க்ளான் டெல் கோல்ஃபோ என்ற போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்குச் சொந்தமானது. இதேபோல், 2017-ல் இதே கும்பலுக்குச் சொந்தமான 1.2 டன் கொக்கைகனை கண்டுபிடித்தது.
இதனால் ஆத்திரமடைந்த அந்த கடத்தல் கும்பல் சோம்பராவின் தலைக்கு விலை வைத்துள்ளது. இதனால், சோம்பராவை பணியில் இருந்து ஒதுக்கி பாதுகாக்க காவல்துறை முடிவு செய்திருக்கிறது.

சோம்பரா கடந்த 5 ஆண்டுகளில் 9 டன் போதைப் பொருளைக் கண்டுபிடித்திருக்கிறது. சோம்பரா என்றால் நிழல் என்று அர்த்தமாம். அப்படியென்றால் ஒரு நிழலை நிழல் உலக தாதா தேடிக் கொண்டிருக்கிறார் என்று சினிமா பாணியில் சொல்லலாம்.

சோம்பரா மட்டுமல்ல இதேபோல் போதைப் பொருள் கடத்தலை முறியடிக்கும் நாய்கள் பலவும் இத்தகைய அச்சுறுத்தலை சந்திப்பதாகக் கூறுகிறார் காவல் உயரதிகாரி ஒருவர்.

அச்சுறுத்தல் காரணமாக துறைமுகத்திலிருந்து விமான நிலையத்துக்கு சோம்பரா பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விமான நிலைய சரக்கு முனையத்தில் அதற்குப் பணி. தினமும் 8 மணி நேர பணி என அமைதியாக வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறது சோம்பரா.



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close