இரை என நினைத்து 8 வயது சிறுமியைத் தாக்கிய கழுகு

கிர்கிஸ்தான் நாட்டில், 8 வயது சிறுமியை இரை என நினைத்து கழுகு ஒன்று தாக்கியது. சிறுமியை கழுகு தாக்கும் காட்சியும் குழந்தையை அங்கிருந்தவர்கள் மீட்கும் காட்சியும் இணையத்தில் வெளியாகியுள்ளது.
கிரிகிஸ்தானின் இஸிக் குல் மாகாணத்தில் ஆண்டுதோறும் வேட்டைத் திருவிழா நடைபெறும். இந்தத் திருவிழாவில் கழுகுகளைக் கொண்டு எப்படி வேட்டையாடப்படுகிறது என்பது காட்சிப்படுத்தப்படுகிறது.
இந்த ஆண்டும் இத்திருவிழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சுற்றுலாப் பயணிகள் நிகழ்விடத்தில் குவிந்திருந்தனர். அப்போது திடீரென பறந்து வந்த கழுகு ஒன்று வேடிக்கை பார்க்க நின்றிருந்த 8 வயது சிறுமியை இரை என நினைத்து தாக்கியது.
இதை சற்றும் எதிர்பாராத சிறுமி தரையில் விழுந்துவிட்டார். அவரை இறுக்கமாக பிடித்துக் கொண்ட கழுகு தாக்கத் தொடங்கியது. உடனே அங்கிருந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் வேட்டையில் ஈடுபட்டவர்களும் விரைந்துவந்து சிறுமியை மீட்டனர்.
சிறுமிக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.