[X] Close
 

நடனமாடியதால் கைதான ஈரானியப் பெண்; இணையத்தில் குவியும் ஆதரவு


women-dance-in-support-of-iranian-teen-arrested-over-instagram-video

  • பாரதி ஆனந்த்
  • Posted: 10 Jul, 2018 15:55 pm
  • அ+ அ-

ஈரானிய இளம் பெண் மதே ஹோஜாப்ரிக்கு சர்வதேச அளவில் ஆதரவு பெருகி வருகிறது. நடனமாடியதற்காக அவர் கைது செய்யப்பட்டதால் உலகின் பல்வேறு பகுதியிலிருந்தும் பெண்கள் நடனமாடி அதை தங்கள் சமூக வலைபக்கங்களில் பகிர்ந்து  மதேவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக, #MaedehHojabri #DancingIsNotACrime #Dance with us ஆகிய ஹேஷ்டேகுகள் சமூகவலைதளங்களில் ட்ரெண்டாகின்றன.

எதற்காக கைது?
ஈரானைச் சேர்ந்த மதே ஹோஜாப்ரி (வயது 19) என்ற பெண் தன்னுடைய வீட்டில் ஒரு பாடலுக்கு நடனமாடி, அதை வீடியோ எடுத்தார். பின்னர் இன்ஸ்டாகிராமில் அதை பதிவிட்டார். அந்த வீடியோவைப் பலரும் பார்த்தனர். இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். 

அவருடைய இன்ஸ்டாகிராம் கணக்கை 6 லட்சத்துக்கும் அதிகமானோர் ‘பாலோ’ செய்து வந்துள்ளனர். இதையடுத்து அவருடைய இன்ஸ்டாகிராம் கணக்கையும் ஈரான் போலீஸார் முடக்கி உள்ளனர்.
தலையில் ஹிஜாப் அணியாத குற்றம், ஆபாசமாக உடையணிந்தது, நடனமாடியது என பல்வேறு குற்றச்சாட்டுகளை மதே மீது போலீஸார் சுமத்தியுள்ளனர்.

இதுதவிர தேசியத் தொலைக்காட்சியில் மதே மன்னிப்பும் கோர வைக்கப்பட்டார்.
இதற்கு ஈரானியர்கள் சிலரும் சர்வதேச அளவில் பெண்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுதவிர சமூக வலைதளவாசிகள் தங்கள் வலைப்பக்கங்களில் மதேவுக்கு ஆதரவாக நடன வீடியோவஒ பகிர்ந்து வருகின்றனர்.

லண்டனிலிருந்து சில பெண்கள் மதேவுக்கு ஆதரவாக நடனமாடி அந்த வீடியோவை அப்லோட் செய்தனர். "லண்டன் சாலையில் மதே ஹோஜாப்ரிக்கு ஆதரவாக நடனமாடியுள்ளோம். மனித உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் துணிச்சல்மிகு ஈரானியர்களுள் மதேவும் ஒருவர். நடனம் ஒன்றும் கிரிமினல் குற்றமல்ல. எங்களோடு நடனமாடுங்கள்" எனப் பதிவிட்டுள்ளனர்.

இன்னொரு ஆதரவாளர், "ஈரானியர்களே, மதேவுக்கு ஆதரவாக நடனமாடுங்கள்" எனப் பதிவிட்டு தனது நடன வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.

மற்றுமொரு ஆதரவாளர் "நான் மதேவுக்கு ஆதரவாக டெஹ்ரான் பூங்காவில் ஆடுகிறேன்" எனப் பதிவிட்டிருக்கிறார். இப்படியாக மதேவுக்கு ஆதரவு பெருகி வருகிறது.

ஈரானில் பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயம். அதேபோல் பெண்கள் உடை விஷயத்தில் நிறைய கட்டுப்பாடுகள் இருக்கின்றன. பெண்கள் ஆண்களுடன் பொது இடத்தில் நடனமாடுவது தடை செய்யப்பட்டிருக்கிறது.



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close