[X] Close

குகைக்குள் 9 நாட்கள்; மீட்டெடுக்க இன்னும் எத்தனை காலமோ!- தாய்லாந்து சோகம்


missing-thai-boys-found-alive-in-cave

  • பாரதி ஆனந்த்
  • Posted: 03 Jul, 2018 17:11 pm
  • அ+ அ-

தாய்லாந்து நாடே கடந்த 9 நாட்களாக கடும் சோகத்தில் மூழ்கி இருக்கிறது. காரணம், கால்பந்து கோச்சுடன் சென்ற 13 குழந்தைகள் ஒரு குகைக்குள் மாட்டிக் கொண்டனர்.

குகையை சுற்றிப்பார்க்கச் சென்றபோது இந்த விபத்து நடந்தது. 

இந்த செய்தியைப் படித்ததுமே குரங்கணி சம்பவத்தின்போது பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் சொன்னதுதான் நினைவுக்கு வந்தது, "ட்ரெக்கிங் செல்வது வெறும் அட்வென்ச்சர் அல்ல; வனத்தை பொறுப்புணர்ச்சியுடன் அணுகுங்கள்" என அவர் கூறியிருந்தார்.

இயற்கையை எப்போதுமே நாம் பொறுப்புணர்ச்சியுடந்தான் அணுக வேண்டும். தாய்லாந்து நாட்டில் ஜூலை தொடங்கி அக்டோபர் வரை கடுமையான மழைக்காலம். மழைக்காலத்தில் குகைப் பயணம் என்பது பொறுப்பற்ற செயல். அதுவும் 12 குழந்தைகள் அத்தனை பேரும் 11ல் இருந்து 16-க்கு உட்பட்டவர்கள். அவர்களை அழைத்துக் கொண்டு செல்வது என்பது பொறுப்பின்மையின் உச்சம்.

சுற்றிப் பார்க்கச் சென்ற இடத்தில் வெள்ளம் சூழ்ந்தது. குகைக்குள் இருந்து அந்த சிறுவர்களால் வெளியே வர முடியவில்லை. முதலில் சிறுவர்கள் உயிருடன் இருக்கிறார்களா என்பதே தெரியாமல் இருந்த நிலையில், 9 நாட்களுக்குப் பிறகு இன்றுதான் தாய்லாந்து சிறுவர்கள் உயிருடன் இருப்பதே கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுடன் கோச்சும் இருக்கிறார்.
மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த பிரிட்டனைச் சேர்ந்த இரண்டு பேர்தான் குழந்தைகளைக் கண்டுபிடித்துள்ளனர்.

முதலில் அந்த குகைக்குள் மீட்புக் குழுவினர் வழக்கம்போல் யாராவது இருக்கிறீர்கள் என குரலை அனுப்ப அங்கிருந்து கோரஸாக வந்தது தேங்யூ (நன்றி) என்ற வார்த்தை. பின்னர் ஒரு டைவர் எத்தனை பேர் இருக்கிறீர்கள் எனக் கேட்க, "நாங்கள் மொத்தம் 13 பேர்" எனக் கூறுகிறார்கள்.

எப்போது எங்களை அழைத்துச் செல்வீர்கள்?


இன்று இல்லை. நாங்கள் இருவர்தான் வந்திருக்கிறோம்? நிறைய பேர் வருகிறார்கள்? நீங்கள் அனைவரும் மிகவும் தைரியமானவர்கள்.


உங்களுக்கு உணவு, மருத்துவ உதவிகள் வரும்... என்று கூற உரையாடல் முடிகிறது.


மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த அந்த இருவருக்கும் ஸ்கூபா (SCUWBA- Self Contained Under Water with a Breathing Aid). 
இப்போது குகைக்குள் படகை செலுத்த முடியாத நிலையே இருக்கிறது. தொடர்ந்து மழை பெய்துவருவதால் குகைக்குள் இருந்து தண்ணீரை பம்ப் மூலம் வெளியேற்றுவதும் சாத்தியமற்றது. எனவே குகைக்குள் சிக்கியுள்ள சிறுவர்களுக்கு ஸ்கூபா டைவிங் எப்படி என்பதை சொல்லிக் கொடுத்தே மீட்க வேண்டும். அது ஒன்றே வழி என் கின்றனர் மீட்புக் குழுவினர். அதற்கு இன்னும் சில வாரங்கள்கூட ஆகலாம். ஆனால், அதுவரை குகைக்குள் இருப்பவர்களுக்கு உணவு தேவை, மருத்துவ உதவி தேவை. எனவே ஸ்கூபா டைவிங் தெரிந்த மீட்புக்குழுவினர் உதவியுடன் உணவுப் பொருட்களைக் கொண்டு சேர்க்க மீட்புக் குழு திட்டமிட்டிருக்கிறது.

வெள்ளம் நிரம்ப நிரம்ப குகைக்குள் சென்று கொண்டே இருக்கும் அந்த சிறுவர்கள் இப்போதைக்கு ஒரு குறுகிய பாறையில் தஞ்சம் புகுந்துள்ளனர். ஒருவேளை மழை அதிகமாக பெய்து வெள்ளம் இன்னும் அதிகமாக குகைக்குள் புகுந்தால் அவர்கள் தற்போது இருக்கும் இடத்திலிருந்தும் பின்னோக்கிச் செல்ல நேரிடும். அது மீட்புப் பணியில் இன்னும் சிக்கலையே ஏற்படுத்தும்.

"மகனே நீ வந்துவிடுவாய்" என்று நம்பிக்கையுடன் காத்திருக்கும் பெற்றோர் இன்னும் எத்தனை நாளைக்கு காத்திருக்க வேண்டும் என்பது தெரியவில்லை. இப்போதும் சொல்கிறேன்.. இயற்கையை பொறுப்புணர்ச்சியுடன் அணுகுவோம்!

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close