[X] Close

ஐய்யோ மேகத்தைக் காணோம்..! வடிவேலு பாணியில் புகார் சொல்லும் ஈரான் ராணுவ அதிகாரி


iran-accuses-israel-of-stealing-its-clouds-snow-manipulating-weather

  • பாரதி ஆனந்த்
  • Posted: 03 Jul, 2018 11:28 am
  • அ+ அ-

நடிகர் வடிவேலு ஒரு படத்தில் ஐயா ஏன் கெணத்த காணோம்.. கெணத்த காணோம்னு அலறிக்கொண்டு வந்து போலீஸ்காரர்களை அதிர்ச்சியடைய வைப்பார். அட அதே பாணியில் ஒரு நாட்டின் அதிகாரி புகார் சொல்கிறார்.

ஈரான் நாட்டின் ராணுவ ஜெனரல் ஒருவர் தங்கள் நாட்டுக்கு மேலே வரும் மழை மேகங்களை இஸ்ரேல் திருடிவிடுவதாகக் கூறியிருக்கிறார். ஈரான் நாட்டின் ராணுவ ஜெனரல் கோலம் ரேஸா ஜலாலி, இஸ்னா செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், "சமீபகாலமாக ஈரான் நாட்டின் தட்பவெப்பம் வெகுவாக மாறி வருகிறது. இதில் அந்நிய நாட்டு சதி இருக்கலாம் என நம்புகிறேன்.

குறிப்பாக இஸ்ரேலும் அந்தப் பிராந்தியத்தில் உள்ள மற்றொரு நாடும் இணைந்து கூட்டு குழுக்களை அமைத்து ஈரானை நோக்கி நகரும் மேகக்கூட்டங்கள் மழை பொழியாமல் இருக்கும் வகையில் சில அறிவியல் மாற்றங்களைச் செய்கின்றனர். நாம் மேகத் திருட்டு, பனித் திருட்டை எதிர்கொண்டுள்ளோம். ஆப்கானிஸ்தான் மத்தியதரைகடல் நாடுகளுக்கு இடையேயான அத்தனை மலைப்பிரதேசமும் பனி நிரம்பியதாக இருக்கிறது, ஈரானைத் தவிர" எனக் கூறினார்.

ஆனால், ஜெனரல் ஜலாலியின் இந்தப் புகாரை ஈரான் நாட்டு வானிலை ஆய்வு மையத் தலைவர் அஹாத் வாஸிப் மறுத்திருக்கிறார். இது குறித்து வாஸிப், "ஜெனரல் ஜலாலி மேகத் திருட்டு குறித்து தன்னிடம் ஆவணம் இருப்பதாகக் கூறுகிறார். ஆனால், எனது வானிலை அறிவுக்கு எட்டியளவில் இது சாத்தியமல்ல. எந்த ஒரு நாடும் மற்றொரு நாட்டின் மேகத்தையோ பனியையோ திருட இயலாது.

ஈரான் நாடு நீண்ட வறட்சியை சந்தித்து வருகிறது. இந்த வேளையில் இத்தகைய கேள்விகளை எழுப்புவதால் பிரச்சினை தீரப்போவதில்லை மாறாக சரியான தீர்வை நோக்கி நகரவிடாமல் நம்மை முடக்கிவிடும்" என்றார்.

இது முதன் முறை அல்ல..
ஆனால், ஈரான் நாடு இப்படி ஒரு புகார் தெரிவிப்பது இது முதன்முறையல்ல. கடந்த 2011-ல் முன்னாள் அதிபர் முகமது அஹமதிநேஜாத், "ஈரானில் வறட்சியை ஏற்படுத்த மேற்கத்திய நாடுகள் திட்டமிடுவதாக" கூறினார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close