[X] Close

ஆப்கானிஸ்தானில் திருமண நிகழ்வில் தற்கொலைப் படை தாக்குதல்: 5 பேர் பலி


5

  • kamadenu
  • Posted: 12 Jul, 2019 13:29 pm
  • அ+ அ-

ஆப்கானிஸ்தானில் திருமண நிகழ்வில் நடந்த தற்கொலைப்படைத் தாக்குதலில் 5 பேர் பலியாகினர். 40க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

இதுகுறித்து ஆப்கானிஸ்தான் உள்ளூர் அதிகாரிகள் தரப்பில், ”ஆப்கானிஸ்தானில் கிழக்குப் பகுதியில் உள்ள  நன்கர்ஹர் பகுதியில் நடந்த திருமண நிகழ்வு ஒன்றில் இளைஞர் ஒருவர் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 5 பேர் பலியாகினர். 40க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

இதில் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

ஆனால் ஐஎஸ் தீவிரவாதிகள் தொடர்ந்து நன்கர்ஹர் பகுதியில் தாக்குதல் நடத்தி வருவதால் இந்தத் தாக்குதலை ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்தி இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். கடந்த மாதம் அரசு கட்டுபாட்டுப் பகுதியில்  தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியாகினர்.

ஆப்கானிஸ்தானில் அரசுப் படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. அரசுப் படைகளுக்கு ஆதரவாக அமெரிக்கக் கூட்டுப் படையும் அங்கு முகாமிட்டுள்ளது.

கடந்த ஆண்டு தொடக்கத்தில் தலிபான் அமைப்பைச் சேர்ந்த தற்கொலைப் படைத் தீவிரவாதி தலைநகர் காபூலில் வெடிகுண்டுகள் நிரப்பிய ஆம்புலன்ஸை வெடிக்கச் செய்ததில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அண்மைக்காலமாக தலிபான்களின் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.

கடந்த மூன்று வருடங்களில் தலிபான்களின் ஆதிக்கம் ஆப்கானிஸ்தானில் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close