[X] Close
 

ராஜபக்ச பிரச்சாரத்துக்கு ரூ.48 கோடி வழங்கிய சீனா: நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் அம்பலப்படுத்தியது


china-s-aide-to-rajapakshe

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை திறந்து வைத்தார் மகிந்த ராஜபக்ச | கோப்பு படம்

  • kamadenu
  • Posted: 29 Jun, 2018 12:13 pm
  • அ+ அ-

இலங்கையில் அதிபர் தேர்தல் நடந்தபோது மகிந்த ராஜபக்ச பிரச்சாரத்துக்காக சீன நிறுவனம் ஒன்று ரூ.48 கோடி வழங்கியதாக நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது.

இலங்கை அதிபராக மகிந்த ராஜபக்ச 19.11.2005 முதல் தொடர்ந்து இரண்டு முறை சுமார் 10 ஆண்டுகள் பதவி வகித்தார். இலங்கை அரசியல் அமைப்பு சட்டப்படி ஒருவர் இரண்டு முறை அதிபர் பதவிக்குப் போட்டியிடலாம் என்ற நிலை முன்பு இருந்தது. ஆனால் ராஜபக்ச அதிபராக இருந்தபோது அதிபர் பதவியில் உள்ள ஒருவர் இருமுறைக்கு மேல் போட்டியிடலாம் என்று அரசியல் அமைப்பின் 18-வது சட்டப் பிரிவைத் திருத்தினார்.

பின்னர் 2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் அதிபர் தேர்தல் நடத்துவது மகிந்த ராஜபக்சவுக்கு மிகவும் உகந்தது என்று அவரது ஆஸ்தான ஜோதிடர்கள் கணித்துக் கூறினர். இதனால் இலங்கை அதிபர் தேர்தலை ஒரு ஆண்டு முன்கூட்டியே 8.1.2015 நடத்துவதாக அறிவிக்கப்பட்டது.பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இந்த தேர்தலில் அதிபர் பதவிக்கு மகிந்த ராஜபக்ச உட்பட 19 வேட்பாளர்கள் களம் இறங்கினர். எதிர்க்கட்சிகள் புதிய ஜனநாயக முன்னணி என்கிற பெயரில் கூட்டணி அமைத்து மைத்ரிபால சிறிசேனாவை பொது வேட்பாளராக களமிறக்கினர். 

இலங்கை தமிழர்கள், முஸ்லிம்களின் பெரும் ஆதரவுடன் சிறிசேனா 62,17,162 வாக்குகள் பெற்று ராஜபக்சவை (57,68,090 வாக்குகள்) தோல்வி அடையச் செய்தார்.

இலங்கை அதிபராக சிறிசேனா பதவி ஏற்று மூன்றரை ஆண்டுகள் கடந்துள்ளன. இந்நிலையில் அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து வெளியாகும் பிரபல நாளிதழான நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், இலங்கை அதிபர் தேர்தலின்போது மகிந்த ராஜபக்சவின் பிரச்சாரத்துக்காக சீனா ரூ.48 கோடி வழங்கியுள்ளது என்று தற்போது புலனாய்வு செய்து தெரிவித்துள்ளது. 

வளர்ந்து வரும் நாடுகளுக்கு கடன் கொடுத்து உலக அளவில் கடல் பரப்பில் தமது ஆதிக்கத்தை அதிகரித்துக் கொள்வதற்காக சீனா இலங்கையை எப்படி பயன்படுத்திக் கொண்டது என்பது குறித்து நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் இலங்கை, இந்தியா, சீனா, ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளின் அதிகாரிகளுடன் பல மாதங்களாக நடத்திய நேர்காணல்கள், ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு இக்கட்டுரையை வெளியிட்டுள்ளது.

இது குறித்து அதில் கூறப்பட்டிருப்பதாவது:

ராஜபக்ச ஆட்சியின்போது இலங்கையில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நிர்மாணிப்பதற்காக முதற்கட்டமாக 307 மில்லியன் அமெரிக்க டாலர்களும், இரண்டாவது கட்டமாக துறைமுகத்தை விரிவுபடுத்துவதற்காக 757 மில்லியன் அமெரிக்க டாலர்களும் கடனாக சீனா வழங்கியது.

இப்பணி சீனா ஹார்பர் நிறுவனத்திடம் வழங்கப்பட்டது. கட்டுமானப் பணிகளில் பெருமளவு சீனாவைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த கடன் சுமைகளைப் பயன்படுத்தி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருட குத்தகைக்கு சீனா பெற்றது.

மேலும் 2015-ம் ஆண்டு இலங்கை அதிபர் தேர்தல் நடந்தபோது மகிந்த ராஜபக்சவின் பிரச்சாரத்துக்காக ரூ.7.6 மில்லியன் அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் ரூ.48 கோடியே 21 லட்சத்து 25 ஆயிரம்) ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நிர்மாணித்த சீனா ஹார்பர் நிறுவனம் வழங்கியது.

இவ்வாறு நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் நிர்மாணப் பணிளை மேற்கொள்ள முதலில் இந்தியாவுக்குதான் அழைப்பு விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- எஸ். முஹம்மது ராஃபி



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close