[X] Close

வட கொரியாவுக்கும் பலன் வேண்டும்..


  • kamadenu
  • Posted: 08 Jul, 2019 07:30 am
  • அ+ அ-

-டாக்டர் ஸ்ரீதர் கிருஷ்ணசுவாமி

அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கும் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்னுக்கும் இடையே கடந்த ஜூன் 30-ம் தேதி பன்முன்ஜோமில் நடந்த சந்திப்பு பல வகையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. முதன்முறையாக அமெரிக்க அதிபர் ஒருவர் தென் கொரியாவின் எல்லையைத் தாண்டி வட கொரியாவில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அடுத்ததாக, ஹனாயில் நடந்த இருதரப்பு பேச்சுவார்த்தை அரைகுறையாக முடிந்திருந்தாலும், இரு நாடுகளும் மீண்டும் மூன்றாவது முறையாக இந்த ஆண்டுக்குள் சந்தித்துப் பேசத் திட்டமிட்டுள்ளன. அணு ஆயுதங்களைக் குறைப்பது, கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை தணிப்பது, மேலும் ஜப்பான், கொரிய நாடுகளில் அமைதியை ஏற்படுத்துவது உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து பேச உள்ளன.

தற்போதைய சூழ்நிலையை மாற்றி, இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மேம்பட, வட கொரியாவின் பிரச்சினைகளை அமெரிக்கா புரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் பேச்சுவார்த்தை முயற்சிகள் அர்த்தமுள்ளதாக இருக்கும். வட கொரியா பிரச்சினைக்கு ஒபாமா - பிடென் தலைமையை குறை கூறுவது நீண்ட கால நோக்கில் எந்தப் பலனும் தராது. அமெரிக்க அதிபராக இருந்த ஒபாமா, கிம் ஜோங் உன்னை பல முறை பேச்சுவார்த்தைக்கு அழைத்ததாகவும் அதை ஏற்க கிம் மறுத்து விட்டதாகவும் ட்ரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருவதில் உண்மை இல்லை. ஆனால், மீடியா தொடர்ந்து பொய் செய்திகளை வெளியிட்டு வருவதாக ட்ரம்ப் புகார் கூறி வருகிறார். உண்மையில் 6 நாடுகள் பங்கேற்ற கூட்டத்தில் வட கொரியா கலந்து கொள்ள வேண்டும் என்றுதான் வேண்டுகோள் விடுத்தது ஒபாமா நிர்வாகம். ஒருபோதும், பேச்சுவார்த்தைக்கு வருமாறு கிம்மையோ அல்லது அவரது தந்தை இரண்டாம் கிம் ஜோங்கையோ அழைத்ததே இல்லை என்பதுதான் உண்மை நிலவரம்.

அமெரிக்காவில் அடிக்கடி சொல்லப்படும் ஒரு பழமொழி, இலவசமாக எதுவுமே கிடைக்காது என்பது. அதை அமெரிக்கரும் தொழிலதிபருமான ட்ரம்ப் புரிந்து கொள்ள வேண்டும். கிம்மை மிரட்டி, பேசி சமாளித்து, அணு ஆயுத ஒப்பந்தத்தில் கையெழுத்திட வைத்துவிட்டால், எல்லாம் சரியாகிவிடும் என ட்ரம்ப் நினைத்தால், அது நடக்காது. ட்ரம்போ அல்லது அவருடன் இருக்கும் நிர்வாகமோ யார் நினைத்தாலும் கிம் விரும்பாத காரியங்களை செய்ய வைக்க முடியாது. ஹனாயில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததற்கும் இதுதான் முக்கிய காரணம். வட கொரியாவையும் சமீபத்தில் ஈரானையும் அதட்டி, உருட்டி, மிரட்டி, போர் நடந்தால் என்னாகும் தெரியுமா என பயம் காட்டி வருகிறது ட்ரம்ப் நிர்வாகம். வட கொரியாவைப் பொருத்தவரை, ராணுவ பலத்தில் அமெரிக்காவுக்கு சமமானது இல்லை என்றாலும் கிழக்கு ஆசிய நாடுகளில் மிகப் பெரிய அழிவை ஏற்படுத்த முடியும்.

வட கொரியா மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை நீக்க வேண்டும் என கிம் விரும்புகிறார் என்பதை அமெரிக்கா முதலில் புரிந்துகொள்ள வேண்டும். உலகிலேயே அதிக அளவில் அமெரி்க்காவாலும் ஐ.நா. சபையாலும் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்ட நாடு வட கொரியாதான். ட்ரம்பும் கிம்மும் சகஜமாக பேசிக் கொண்டாலும் கடிதங்களை பரிமாறிக் கொண்டாலும் வட கொரிய அதிகாரிகள் அமெரிக்கா மீது வசைபாடிக் கொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவோ தனது எதிர்ப்பு அரசியலை இன்னமும் கைவிடவில்லை.

`வட கொரியா மீது தொடர்ந்து பொருளாதார தடைகள் விதித்தும், எதிராக பிரச்சாரம் செய்தும் வருகிறது அமெரிக்கா. அனைத்து பிரச்சினைகளுக்கும் பொருளாதாரத் தடைகள் விதிப்பதன் மூலம் தீர்வு கிடைத்துவிடும் என அமெரிக்கா நினைப்பது கேலிக்கூத்தாக இருக்கிறது. தொடர்ந்து வட கொரியாவுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது அமெரிக்கா' என வட கொரியா கூறியிருக்கிறது.

வட கொரியாவில் இருக்கும் அணு ஆயுத மையங்களை அழிப்பது மட்டுமே பேச்சுவார்த்தையின் ஒரே நோக்கமாக இருக்கக் கூடாது என்பதை ட்ரம்ப் புரிந்து கொள்ள வேண்டும். இதையேதான் கிம்மும் பல மாதங்களாக சொல்லி வருகிறார்.

வட கொரியாவிடம் தொடர்ந்து ஒரே மாதிரியான அணுகுமுறையை அமெரிக்கா பின்பற்ற வேண்டும். பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால், உடனே மிரட்டல் அறிக்கைகள் வெளியிடுவதும் தனது கப்பற்படையை அனுப்புவதும் கூடாது. எங்கே தப்பு நடந்தது என்பதை கவனமாக கண்டறிய வேண்டும். வெற்றிகரமான ராஜதந்திரம் என்பதே, எதிர் தரப்புக்கும் பலன் கிடைக்கச் செய்வதுதான்.

டாக்டர் ஸ்ரீதர் கிருஷ்ணசுவாமி

எஸ்ஆர்எம் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கல்லூரியின் இதழியல் துறை பேராசிரியர் மற்றும் வாஷிங்டனில் பணியாற்றிய பத்திரிகையாளர்.

தமிழில்: எஸ்.ரவீந்திரன்

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close