[X] Close

சர்வதேச நெருக்கடி: ஹபீஸ் சயித் உள்பட 3 பேர் மீது 23 வழக்குகள் பதிவு; பாக். அரசு கடும் நடவடிக்கை


3-23

  • kamadenu
  • Posted: 04 Jul, 2019 10:23 am
  • அ+ அ-

-பி.டி.ஐ.

உலக நாடுகளின் நெருக்கடி, அழுத்தம் காரணமாக, மும்பை தாக்குதலில் முக்கியக் குற்றவாளி ஹபீஸ் சயித் உள்ளிட்ட 12 பேர் மீது தீவிரவாதச் செயல்களுக்கு நிதி வசூலித்தல் பிரிவில் 23 வழக்குகளைப் பதிவு செய்து பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது.

ஜமாத் உத் தவா அமைப்பு, பல்லா இ இன்சானியத் ஆகிய அமைப்புகளின் சொத்துகளும் முடக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான் தீவிரவாத தடுப்பு அமைப்பு (சிடிடி) நேற்று வெளியிட்ட அறிக்கையில், "ஜமாத் உத் தவா மற்றும் அந்த அமைப்புக்கு உதவுபவர்கள், மற்றும் 5 அறக்கட்டளைகள் தீவிரவாதச் செயல்களுக்குப் பணம் வசூலித்தலில் ஈடுபட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜமாத் உத் தவா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயித் உள்ளிட்ட 12 தலைவர்கள் மீது தீவிரவாதிகளுக்கு நிதியளித்தல் பிரிவில் 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஜமாத் உத் தவா தவிர, லஷ்கர் இ தொய்பா, பல்லாஹ் இ இன்சானியத் அமைப்பு ஆகியவை சேர்ந்து குஜ்ரன்வாலா, மூல்தான், லாகூர் ஆகிய பகுதிகளில் இருந்து தீவிரவாதச் செயல்களுக்கு நிதி திரட்டியது தெரியவந்தது.

இந்த அமைப்பினர் நேரடியாக நிதி திரட்டாமல் அல்- அன்பால், தவாத் உல் இர்சத், முவாஸ் பின் ஜபால் ஆகிய அறக்கட்டளைகள் வழியாக நிதியுதவி திரட்டியுள்ளார்கள். இந்த அமைப்பினர் வசூலித்த பணம், சேர்த்து வைத்துள்ள சொத்துகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன. தீவிரவாதத்தை வளர்க்க இந்த நிதி பயன்படுத்தப்படும் என்பதால் முடக்கப்பட்டு, தீவிரவாதத் தடுப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும் " எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே தீவிரவாதத்துக்கு நிதியுதவியைத் தடுக்கும் அமைப்பு சமீபத்தில் பாகிஸ்தானை கறுப்புப் பட்டியலில் வைத்தது. ஹபீஸ் சயித்தை சர்வதேச தீவிரவாதியாக ஐ.நா.வும் அறிவித்ததைத் தொடர்ந்து, அவர் மீது கடும்நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு பாகிஸ்தான் அரசு தள்ளப்பட்டது. இந்த நடவடிக்கைகளின் எதிரொலியாகவே ஹபீஸ் சயித் உள்ளிட்ட பலரின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.  

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close