[X] Close

செர்னோபிலில் கதிர்வீச்சு பரவுவதைத் தடுக்க ரூ.16,700 கோடியில் புதிய அணு உலை பாதுகாப்பு கட்டமைப்பு


16-700

  • kamadenu
  • Posted: 04 Jul, 2019 07:46 am
  • அ+ அ-

செர்னோபிலில் வெடித்துச் சிதறிய அணு உலையிலிருந்து கதிர் வீச்சு பரவுவதைத் தடுப்பதற்காக ரூ.16,700 கோடியில் புதிய அணு உலை பாதுகாப்பு கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதை ஊடகவியலாளர்கள் பார்வையிட்டனர்.

கிழக்கு ஐரோப்பாவில் உள்ள உக்ரைன் நாட்டின் செர்னோபில் என்ற இடத்தில் அணு மின் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி முதல் அணு உலை 1977-ல் செயல்பாட்டுக்கு வந்தது. அடுத்தடுத்து 4 அணு உலைகள் அமைக்கப்பட்டன. இதில் 4-வது அணு உலை 1986-ம் ஆண்டு ஏப்ரல் 26-ம் தேதி வெடித்துச் சிதறியது. இது உலகின் மிகப்பெரிய அணு உலை விபத்தாக கருதப்படுகிறது. இந்த விபத்தால் அப்பகுதியில் கதிர்வீச்சு பரவியது. இதையடுத்து அப்பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டனர். எனினும் இதனால் பலருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதில் பலர் உயிரிழந்தனர். விபத்து ஏற்பட்ட பகுதியில் சுமார் 200 டன் கதிரியக்க பொருட்கள் உள்ளன இதை முற்றிலும் அகற்ற பல ஆண்டுகள் ஆகும். இதனிடையே, கதிர்வீச்சு மேலும் பரவுவதைத் தடுக்க அந்த அணு உலையைச் சுற்றி தற்காலிகமாக ஒரு பாதுகாப்பு கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. ஆனாலும் கதிர்வீச்சு லேசாக கசிந்து கொண்டே இருந்தது.

இதையடுத்து, அந்த தற்காலிக கட்டமைப்புக்கு மேல் புதிய அணு உலை பாதுகாப்பு கட்டமைப்பு உருவாக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கான முதற்கட்ட ஆய்வு 1998-ல் தொடங்கியது. இதற்கான வடிவமைப்பு இறுதி செய்யப்பட்ட பிறகு 2007-ல் ஒப்பந்தம் வழங்கப்பட்டது. கட்டுமானப் பணி 2010-ல் தொடங்கியது. இந்தப் பணி கடந்த ஆண்டு முடிவடைந்தது. இதற்காக ரூ.16 ஆயிரத்து 700 கோடி செலவாகி உள்ளது. இந்தப் பணிக்கு ஐரோப்பிய மறுகட்டுமான மற்றும் வளர்ச்சி வங்கி நிதியுதவி வழங்கி உள்ளது. உக்ரைன் மட்டும் சுமார் ரூ.778 கோடி நிதியுடன் நிபுணத்துவம் மற்றும் பணியாளர்களை வழங்கி உள்ளது.

இது அரை வட்ட வடிவில், நகரக்கூடிய வகையில் கட்டப்பட்டுள்ள மிகப்பெரிய ஸ்டீல் கட்டுமானம் ஆகும். இதன் மொத்த எடை 36 ஆயிரம் டன். இதன் உட்புற உயரம் 303.5 அடி, நீளம் 803.8 அடி ஆகும். தற்காலிக கட்டமைப்பை அகற்றுவதற்கு போதுமான இடைவெளியுடன் இந்த புதிய கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அணு உலை பாதுகாப்பு கட்டமைப்பை பார்வையிட ஊடகவியலாளர்களுக்கு நேற்று முன்தினம் அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து பல நாடுகளைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் புதிய அணு உலை கட்டமைப்பை பார்வையிட்டனர். அதன் சிறப்பு அம்சங்கள் குறித்து அவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close