[X] Close

மரண தண்டனை அமல்படுத்த உள்ளதால் எனது உயிரு‌க்கு கடும் அச்சுறுத்தல்: இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா அச்சம்


  • kamadenu
  • Posted: 04 Jul, 2019 07:44 am
  • அ+ அ-

-எஸ்.முஹம்மது ராஃபி

இலங்கையில் மரண தண்டனையை அமல்படுத்த அனுமதி வழங்கி உள்ளதால், தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார்.

சிறுவர் பாலியல் வன்கொடுமை, கொலைகள், போதைப் பொருள் விற்பனை போன்ற கடும் குற்றச் செயல்கள், இலங்கையில் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் மீண்டும் மரண தண்டனையை அமல்படுத்த வேண்டும் என பொதுமக்களால் கோரிக்கை முன் வைக்கப்பட்டது. இதையடுத்து போதைப் பொருள் தொடர்பான குற்றச் செயல்களுக்காக 43 ஆண்டுகள் கழித்து, மரண தண்டனையை நிறைவேற்ற அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா அனுமதி அளித்துள்ளார்.

ஆனால், இந்த உத்தரவுக்கு அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பொலன்னறுவையில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியொன்றில் அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா பேசியதாவது:இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக மரண தண்டனையை அமல்படுத்த நான் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதால் என்னை பலவீனப்படுத்த சதித் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இந்த சதிக்கு பின்னால் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் உள்ளனர். இந்த தகவல் உளவுத்துறை மூலம் கிடைத்துள்ளது.

போதைப்பொருள் விற்பனையாளர்கள் மற்றும் போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர்களுக்கு ஆதரவாக சமூக ஊடகங்களும் பிரச்சாரம் செய்கின்றன. ஆனால், போதைப்பொருளை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம், நாட்டு மக்களிடையே அதிகரித்து வருகிறது. அந்த மக்கள் சக்தியை வலுப்படுத்தும் வகையில் சட்டவிரோத போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும். குண்டுவெடிப்புக்கும், போதைப்பொருள் கும்பலுக்கும் தொடர்பு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close